திரு. மணி, திண்டிவனம்
“கீழ்மாவிலங்கை” என்னும் சிற்றூர் வரலாற்றுப் புகழ் பெற்றது. திண்டிவனத்திற்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அவ்வூரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாமலே ஒருவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் எப்படியிருக்கும்? ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். தினமணி நாளிதழின் நிரந்தர வாசகர். அதுதான் எங்களை பிணைத்தது என்றால் ஊடகங்களுக்கு எவ்வளவு வலிமையிருக்கும்.
“திருக்குறள் சொல்லி திருமணம் செய்து வைக்கும் பன்னீர்செல்வம்” என்ற தலைப்பில் தினமணியில் ஒரு கட்டுரையைப்படித்துவிட்டு இரண்டு நாளில் வந்துவிட்டார் மணி. முதல் நாளே பெருந்துறையிலிருந்து இராமச்சந்திரன் என்ற ஆசிரியரும் மகிழுந்து எடுத்துக் கொண்டு வந்து என்னைப் பாராட்டி விட்டு தன் பேரன் திருமணத்தை திருக்குறளால் வாழ்த்த வேண்டுமென்று விண்ணப்பித்து சென்றுவிட்டார். இப்படி திருக்குறள் பெருமைகளை நம் நாளிதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஆகியவை இன்னும் இன்னும் அதிகமாக எடுத்துச் சொன்னால் இச்சமூகத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் என்று நம்புகிறேன்.
திருவாளர் மணி அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் கொண்ட தொடர்பை இன்று வரை இனிமையாகவே கொண்டு செல்கிறார். அவர் சிறந்ததொரு யோகாப் பயிற்சியாளர். சிறந்த இயற்கை மருத்துவர். இவை எல்லாவற்றையும் மக்களுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்தும் கொடுத்தும் தான் வருகிறார். அதனால் தான் சிறந்த ஞானியும் சமூக அவலங்களை துடைத்தெரியவும் புறப்பட்ட வள்ளுவரை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டார்.
யாருடனும் அவர் இயல்பாகவே நட்பு பாராட்டி வாழ்த்துபவராக இருக்கிறார். என்னுடைய நூல் வெளியீட்டிற்கும், ஞானமன்ற செயல்பாடுகளுக்கும் நிதி உதவி அளித்துள்ளதோடு நிகழ்வுகளுக்கு எங்கு அழைத்தாலும் தூரமென்று பார்க்காமல் ஓடோடி வந்திடுவார். தங்கள் பகுதியிலேயே ஞானமன்றக் கிளையைத் தொடங்கவும், ஒரு திருவள்ளுவர் சிலையை நிறுவவும் அவருக்கு வழிக்காட்டுதல் செய்து வருகிறேன்.
பள்ளி ஆசிரியர்களில் காலம், தூரம் பார்க்காமல் திருக்குறள் பணிக்காகப் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை கூடினால் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள். , திருக்குறள் தொண்டர்களோடு தொண்டர்களாக வலம் வருபவர் மணி .
மணியின் புகழ் ஓங்குக.