Skip to content

கவிஞரும், எழுத்தாளரும், வானொலிக் கலைஞருமான “மதுரை பாபாராஜ்

அறிமுகம்

“வாய்ப்பிருந்தும் வாய்ப்பைப் பயன்படுத்த வில்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுண்டோ? வாய்ப்புகளை நாளும் பயன்படுத்தி முன்னேற்றம் காணவேண்டும்.

வாய்ப்புகளே வாழ்வின் வளம்!” என்பதை ஆணித்தரமாகத் தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிடும், சு.பெ.பாபாராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞரும், எழுத்தாளரும், வானொலிக் கலைஞரும், பாடகருமான “மதுரை பாபாராஜ்”, தனது எழுபத்தைந்து வயதைத் தொட்டுவிட்ட நிலையில், வாழ்வில் வளம் பெற்றவராக தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.

பரம்பரை பரம்பரையாக பாட்டுக் குடும்பம் ஒன்றிலிருந்து வந்த பாபாராஜின் பாட்டி பாகீரதி நன்றாக பாடுவார்கள். அக்காலத்தில் வழக்கிலிருந்த புது மணத்தம்பதியினரின் மறுவீடு அழைப்பின் போது, தம்பதியினர் பெயர்களையும் அவர்களது பண்புகளையும் வைத்து பாட்டுப் பாடுவது வழக்கமாக இருந்தது. இவ்வாறான பாடல்களைப் பாடுவதில் இவருக்குத் தனித்திறன் இருந்தது.

அத்துடன் அவரின் அம்மா, சித்தப்பா, தாய் மாமாவான
சி. ராமச்சந்திரன், மாமா வெங்கடேசன், அத்தான் முத்துவீரன், சித்தி சாவித்ரி, அத்தை யமுனா என்போரும் நன்றாகப் பாடுவர்கள்.

இன்னொரு சித்தியான மதுரை இசைக் கல்லூரியில் உயர்ந்த பொறுப்பில் பணிசெய்துவந்த சுசீலா பத்மநாபன் வீணைக் கச்சேரி செய்வார்; இவர் வானொலியில் அடிக்கடி வீணை வாசிப்பவர்; மதுரை பாத்திமா கல்லூரியில் வீணை ஆசிரியையாகவும் பணிபுரிந்து வந்தவராவார்.

இவரது தம்பி மகன் க.கார்த்திக் சுப்பாராஜ் திரைப்பட இயக்குனராகவும், தம்பி கஜராஜ் திரைப்படக் கலைஞராகவும் புகழ் பெற்றுள்ளனர்.

இவ்வாறான இசைப் பின்னணியும், கலைத்துறையின் மீது ஆர்வமும் கொண்ட குடும்பத்தில், சு.பெருமாள் முத்துசுப்பு, தேவகி முத்துசுப்பு ஆகியோருக்கு மகனாக, 1948ம் ஆண்டு ஒக்தோபர் மாதம் 11ம் திகதி மதுரை இராஜாஜி மருத்துவமனையில் பிறந்த பாபாராஜ், தனது குடும்பப் பின்னணி காரணமாகவே கவிதை படைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

சு.பெ.பாபாராஜ் மதுரையிலுள்ள கேப்ரன் ஹால், புனித ஜோசப் கான்வெண்ட், சேதுபதி உயர்நிலைப் பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றுத்தேர்ந்தார்.

விளையும் பயிர் முளையில் தெரியும் என்பதற்கேற்ப, தான் கற்கின்ற காலத்திலேயே கவிதைகள் புனைவதிலும், வாழ்த்து மடல்களுக்கான கவிவரிகள் உருவாக்குவதிலும் ஈடுபடலானார். குறிப்பாக பண்டைய இலக்கியக் கவிதைகள் படிப்பதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்த இவர், வள்ளுவரின் திருக்குறளை பல்துறை ஆய்வுகளுக்கு உட்படுத்தி வருவதில் அபரித நாட்டம் காட்டிவந்தார்.

இவர் எழுதிய கவிதையான ” ஐ ஆர் எட்டு நெல்” முதன்முதலில் 1970 களில் “மாலை முரசு” இதழில் இவரது அத்தான் முத்துவீரன் அவர்களது முயற்சியில் வெளிவந்தது!

தனது உயர் கல்வியை மதுரைக் கல்லூரியில் ஆரம்பித்த கவிஞர், அதன் பின்னர் காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் இணைந்து கற்று, பயிரியல்துறையில் அறிவியல் இளவல் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

கவிஞர் பாபாராஜ் தனது திருக்குறள் முயற்சிகளாக அரிய பல நூல்களை அவ்வப்போது தொகுத்து வெளியிட்டுள்ளார்.

2006ம் ஆண்டு அவரது வெண்பா முயற்சியாக, 145 குறள்கள் தொகுக்கப்பட்டு, “திருக்குறள் பேழை” என்ற நூலாக வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2008ம் ஆண்டில் “குறள்களுக்கும் வெண்பா” என்ற பெயரில் 1330 குறள்களுக்கு வெண்பாக்களை எழுதி வெளியிட்டார். அதன் பின்னர் குழந்தைகளுக்கான “அறம் பொருள் குறள்களுக்குக் குழந்தைப்பாடல்”, “இன்பத்துப்பால் 250 குறள்களின் நிகழ்வுகள்” “1330 குறள்களுக்கும் குறள் விளக்கம்” போன்ற நூல்களையும் வெளியிட்டதுடன், 1330 குறள்களையும் ஆங்கிலத்தில்-மொழியாக்கம் செய்து, நூல் வடிவில் உருவாக்கினார்.

சிலம்புக்குறள், மனக்குறள், REVERBERATION கவிதைக்களஞ்சியம் 1-4 மதுரை பாபாராஜ் கவிதைகள், குழந்தைகளுக்காக அறத்துப்பால், குழந்தைகளுக்காக பொருட்பால், குழந்தைகளுக்காக இன்பத்துப்பால், CHANRORTHALAM E BOOK, கவிதைத் துளிகள், ஔவையார் ஆத்திசூடி, பாரதி புதிய ஆத்திசூடி, 168 பாடல்கள் கொண்ட குறுந்தொகை. Attitudes of love( இன்பத்துப்பால்), VIRTUE(அறத்துப்பால்), VIRTUOUS WEALTH(பொருட்பால்), நாலடியார் ஆங்கில ஆக்கம் – 40 பாடல்கள் போன்ற நூல்களையும் வெளியிட்டார்.

கவிஞரது திருக்குறள் ஆர்வத்தின் பின்னணியின் உந்து சக்தியாக அவரது மனைவியும், எப்போதுமே அவரை இலக்கியப்பணியில் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த நண்பர்கள், சுற்றத்தார், உறவினர்கள் மட்டுமன்றி, Voice Of Valluvar குடும்பத்தாரும், குறிப்பாக அதன் ஒருங்கிணைப்பாளரான, குறள்நெறிக் குரிசில் சி.இராஜேந்திரன் அவர்களையும் குறிப்பிட வேண்டும் என்று கவிஞர் அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வார்.

1973ல் மதுரை பென்னர் (இந்தியா) லிமிட்டட் நிறுவனத்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கிய கவிஞர், மதுரையில் 22 ஆண்டுகளும், பென்னர் நிறுவனத்தின் சென்னைக் கிளை நிறுவனமான பி எம் எஃப் பெல்டிங்க்ஸ் லிமிட்டட்டில் 10 ஆண்டுகளும் சிரேஷ்ட முதுநிலை அலுவலராகப் பணிபுரிந்து, 2007ம் ஆண்டில் ஒய்வு பெற்றார்.

மதுரை பென்னர் (இந்தியா) லிமிட்டட் நிறுவனத்தில் இணைந்த இரண்டாண்டுகளின் பின்னர், அதாவது 1975ல் பா. வசந்தா என்ற இளமங்கையை கவிஞர் விவாக பந்தத்தில் இணைந்து கொண்டார். இவரும் ஒரு கவிதாயினி என்பதுடன், அவரது கவிதை நூல் ஒன்று அண்மையில் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது!

மதுரையில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வந்த நிலையில் பணிமாற்றம் காரணமாவே அவர் தனது குடும்பம் சகிதம் 1995ம் ஆண்டில் சென்னை ஆதம்பாக்கத்துக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது!

கவிஞர்- கவிதாயினி தம்பதியினருக்கு இரண்டு செல்வங்கள்; மகனும், மருமகளும் கணனித்துறையில் தேர்ச்சி பெற்று, இருவருமே துறைசார் தொழில்களில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும், கவிஞரது ஏகபுதல்விக்கு ஒரு செல்வப் புதல்வனுமாக மூன்று பேரப்பிள்ளைகளுடன் அவரது குடும்பம் கொஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எம்.ஏ. பட்டதாரியான மருமகன், அமீரகத்தில் பிரபல்யமான மருத்துவமனை ஒன்றில் பகுதி நிர்வாகியாகத் தொழில் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது!

கவிஞரின் பேரப்பிள்ளைகளில் ஒருவரான வருண் ஆதித்தியா ஓவியம் வரைவதில் திறமை மிக்கவராகக் காணப்படுகின்றார். அவரது ஓவியங்களிற் சில “வேட்டை”யிலும் இடம் பெற்றுள்ளன.

இதுவரை வெளிவந்துள்ள கவிஞரின் ஏனைய நூல்களாக,கவிச்சாரல்-1981, கவியமுதம்-1984, மகரவிளக்கு -1985,மரபுகளின் அருவி-1989, மகிழம்பூ-1997, கிளிஞ்சல்கள்-2002, மகரயாழ் -2004 அற்புதத்தரு-2005 என்பன கொள்ளப்படுகின்றன.

1982ல் பாரதியார் நூற்றாண்டு விழாவிலும்,திருச்சி வானொலி நிலையம்- 08.07.1986ல் நடாத்திய கவிமுகில் நிகழ்ச்சியிலும், 1991ம் ஆண்டு நடைபெற்ற பாரதிதாசன் நூற்றாண்டு விழாவிலும் கவிஞர் கலந்து கொண்டதோடு, 100 கவிஞர்கள் பங்கேற்ற தமிழ்நாடு அரசு விழாவிலும், 1993ல் நடந்த அமரர் ராஜீவ் காந்தி கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு, மதுரை

மாவட்டத்திற்கான முதல் பரிசைத் தட்டிக்கொண்டார். அத்துடன் மதுரை வானொலி நிலையத்தினூடாக 18.08.1994ல் “சரவிளக்கு” என்ற நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தார். சென்னை வானொலி நிலையத்தின் அழைப்பின் பேரில், சினிமா நேரம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.

பொதிகை தொலைக்காட்சியில் -26.09.2003ல் பேச்சுக் கச்சேரியையும் 13.09.2005ல் முத்தமிழ் மன்றம், 16.02.2007 கவிதைபாடு குயிலே போன்ற நிகழ்ச்சிகளயும் நடாத்தினார். அத்துடன், 2018ல் வெளிச்சம் தொலைக்காட்சியில் “அறத்துப்பால் குறள் விளக்கம்” என்ற நிகழ்ச்சியையும் நடாத்தியுள்ளார்.

முத்தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் செந்தமிழ் தன்னில் செழித்தே நிற்கும் ஒண்டமிழ் விரும்பி ஒலிர்தரு செயல்கள் ஒங்கிடும் தமிழ்ப் பணி உயர்வாய் செய்தார், உலகு போற்றிடும் உயர் திருக்குறளில் ஒப்பற்ற ஆய்வு, மொழிபெயர்ப்பு, வெண்பா வரவு, பிஞ்சு மணம் கொள்ளும் குறளின் பாடல், குழந்தைக்காய் மகிழம்பூ, மகரயாழ், மகர விளக்கு எத்தனை எத்தனை தாய்த் தமிழ் நூல்கள்…மதுரை பாபாராஜ் தமிழ்ப்பணி போற்றி அளித்தோம் ” என்ற வாழ்த்துடன் “குறள்

மணம் விருது” பெற்ற கவிஞர், மாமதுரைக் கவிஞர் பேரவை நடாத்திய 126வது பாரதியார் பிறந்த நாள் விழாவின் போது, “கவிப்பாரதி விருது” பெற்றார்.

2014ம் ஆண்டு சென்னை சேவை மையத்திடமிருந்து “தமிழ் இலக்கிய மாமணி” விருதையும் பெற்றுக் கொண்டார்.

2009ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்த்தாய் அரங்கட்டளை, கவிஞரின் சேவையைப் பாராட்டி “இலக்கிய மாமணி சிறப்பு” விருது வழங்கி கௌரவித்தது. அத்துடன் மதுரைக் கவிஞர் பேரவையின் இரண்டாம் மாநாடு 2004ம் ஆண்டு நடைபெற்றபோது, மரபுக் “கவிகளின் அருவி” என்ற மகுடத்தில் வாழ்த்துமடல் பெற்றார்.

இறுதியாக 2023ம் ஆண்டு கல்லைத் தமிழ் சங்கம் இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி, “குறள் மணம் விருது” வழங்கியது.

இவ்வாறு விருதுகள் பல பெற்றும், நூல்கள் பலவற்றை வெளியிட்டும், குறள் மணம் பரப்பும் நற்பணிகள் பலவற்றைச் செய்துவரும் கவிஞர் பாபாராஜ் அவர்களை இலங்கைத் திருநாட்டிலிருந்து “வேட்டை”யும் வாழ்த்துகின்றது!

https://vettaigalhinna.blogspot.com/2023/08/blog-post_29.html?m=1