Skip to content

ஊழ் – “குறட் செல்வம்” என்ற நூலிலிருந்து

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஊழ் குறித்த கருத்துகள் உளங் கொள்ளத்தக்கது. எண்ணி மகிழத் தக்கது.அவரது புரட்சிகரமான கருத்துகளை அவரது “குறட் செல்வம்”என்ற நூலில் காணலாம்…, இதோ அவரது குறுங்கட்டுரை…

முறை மாற்றம்

மனித குலத்தை அலைத்து வரும் தீமைகளுள் அழுக்காறு தலையாயது, அதுவே முதல் தீமை. அந்தத் தீமையிலிருந்தே பிற தீமைகள் தோன்றுகின்றன. அதனால் அன்றோ, திருவள்ளுவரும் “அழுக்காறு என ஒரு பாவி” என்று வன்மையாகப் பேசுகின்றார்.

அழுக்காறு எங்கும் தீது; எதிலும் தீது; எப்பொழுதும் தீது. ஆனால் ஒருசிலர் கல்வியில் நன்மை செய்வதில் புகழ் வேட்டலில் அழுக்காறு கொள்ளலாம் என்பது போலக் கூறிவருகின்றனர். ஆனால், எத்துறையிலும் அழுக்காறு கொள்ளுதல் தீதே, அதன் பயன் அழிவே.

அழுக்காறுடையான் தான் ஒன்றைப்பெற அவாவ மாட்டான். பிறர் பெற்றிருப்பதை அழிக்கவே முயற்சிப்பான். அங்ஙனம், அழிக்க இயலாத போது அவன், பெற்றிருப்போருக்குக் குற்றங்கள் கற்பிப்பான். இந்த உலகை வருத்தும் தீமைகளுள் தீமை அழுக்காறேயாம்.

அழுக்காற்றைத் தொடர்ந்துதான் அவா பிறக்கிறது; அவாவைத் தொடர்ந்து தான் வெகுளி பிறக்கிறது; வெகுளியைத் தொடர்ந்து இன்னாச்சொல் பகை முதலியன தோன்றுகின்றன. ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய காலமும், மனித சக்தியும் பயனின்றி அழிவுக்குத் துணை போவதாகி விடுகிறது. ஆதலால், அழுக்காறுடையான் ஒருபோதும் உயரமாட்டான். வறுமொழியாளர் அரங்கில் வாயடைக்கும்போது, உயர்த்திக் காட்டுதலைத் தவிர, வேறு எந்த வகையான உயர்வும் மறந்தும்கூடக் காணமுடியாது.

“அழுக்காறுடையான்கண் ஆக்கம் போன்றில்லை” என்று திருக்குறள் தெளிவாக ஐயத்திற்கிடமின்றி ஓதுகிறது.

இங்ஙனம் ஓதிய திருக்குறள் பின்பு, “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” என்று கூறுகிறது. இத் திருக்குறள் புதிர்போல அமைந் துள்ளது.

திருவள்ளுவர் வினாவும் எழுப்பாமல், விடையும் கூறாமல் ஐயத்தில் வைத்த திருக்குறள் இஃது ஒன்றேயாம்.

“நினைக்கப்படும்” என்ற அளவிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ஆயிரம் ஆயிரம் சிந்தனையைத் தூண்டுகிறது. “நினைக்கப் படும்” என்ற சொல்லுக்கு; “ஆராயப்படும்” என்று கொண்டு ஆக்கமும் கேடும் ஊழின் வழிப்பட்டது, என்றெழுதியுள்ளார் பரிமேலழகர். “அழுக்காறுடையானது செல்வமும், செவ்வியான் கேடும் நினைத்த அந்தப் பொழுதிலேயே அழியும் அதாவது அவை நிலைத்து நில்லா” என்பது பரிதியார் உரை. பரிமேலழகர் உரையினும் பரிதியார் உரை சிறந்ததாக இருக்கிறது.

ஆயினும், “நினைக்கப்படும்” என்ற சொல்லில் அமைந்திருக்கின்ற, உணர்வு அழுத்தத்திற்கு ஏற்றவாறு விளக்கமில்லை. “நினைக்கப்படும்” “என்ற சொல்லில் ஒரு “கடுமை” தொனிக்கிறது.

“ஆராய்க!”- அஃதோர் ஆணை! அரசிற்கிடப்பெற்ற ஆணை ! சான்றோர் உலகுக்கு இடப்பெற்ற ஆணை! அழுக்காறுடையான் கண் ஆர்வம் இல்லை; ஆள்வினை இல்லை; அவ்வழி ஆக்கமும் இருத்தற்கு வாய்ப்பில்லை; ஆயினும், ஆக்கம் இருக்கிறது! அது எப்படி?

திருவள்ளுவர் ஊழ் தத்துவத்திற்கு உடன்பாடுடை யவரே! ஆயினும், இன்று திரித்துக் கூறப்படுகின்ற ஒருபால் சார்புடைய ஊழ்த் தத்துவம் ஊழ்க்கொள்கை திருவள்ளுவர்க்கு உடன்பாடன்று.

உடைமை, உடலோடு தொடர்புடையது. அது பிறப்பு மாறுபடும் பொழுது உயிரைத் தொடர்ந்து செல்லாது. உயிரைத் தொடர்ந்து நுண்ணுடம்பு சார்பினதாக நீங்காது செல்லக் கூடியவை அறிவு, ஆற்றல், சீலம், பண்பு முதலியனவேயாம். இதுதான் திருவள்ளுவர் கருத்து என்பதைப் பல்வேறு திருக்குறள்களின் மூலம் உணரமுடிகிறது. உயிர்ச்சார்புடைய நலன்கள் பற்றியே திருக்குறள் பல்வேறு அதிகாரங்களில் ஓதுகிறது.

உடைமை அதாவது பொருளுடைமை என்று ஓர் அதிகாரமே வைக்கவில்லை. அதற்கு மாறாகப் “பொருள் செயல் வகை” வைத்தது அறிதற்குரியது. பொருள் ஊழின் வயப்பட்டு வந்துஅமையுமென்றால், அவர், பொருள் செயல் வகை என்று ஆணையிட்டுப் பொருள், பிறப்பால் அமைவதன்று, செயற்பாலதே, என்று விளக்கியிருக்கமாட்டார்.

அடுத்து ஊழ் அதிகாரத்திலும் கூட, “சூழின் துய்த்தல்” போன்ற வினைச்சொற்களின் அடிப்படையிலேயே ஊழின் வலி யுறுத்தல் பேசுகிறார்.

”ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.”

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது,”

என்பன இங்கு நோக்கத் தக்கன :

ஆதலால், அவ்விய நெஞ்சத்தான் கண் ஆக்கம் முறையானதன்று. அதில் ஏதோ தவறு இருக்கின்றது; சூது இருக்கிறது; ஆராய்ந்து அவ்விய நெஞ்சத்தானிடம் உள்ள ஆக்கத்தை அகற்றுக! என்பதே வள்ளுவர் ஆணை! செவ்வி யான் செம்மை நலமுடையான் – செம்மை நலத்துள் பிறரை வஞ்சித்து வாழாததும், பிறர் பங்கைத் திருடாததும் அடங்கும். காலம் என்ற களத்தில் நின்று உழைத்தல் உயர்ந்தோரியல்பு. இங்ஙனம் உழைத்திடும் உத்தமர்கள் வறுமையால் கேடுற்றிருப்பது புரியாத புதிர்! “ஆக்கத்திற்குரிய அனைத்துப் பண்புகளும் இருக்கக் கேடு எப்படி வந்தது? ஆராய்க!” என்று ஆணையிடுகிறார் வள்ளுவர்.

“ஆராய்ந்தால், செவ்வியார் கேடு நீதிக்கு முரண்பட்டது; நியாயத்திற்கு முரண்பட்டது என்பது புலப்படும். செவ்வியார் கேட்டினை உடன் அகற்றுக!” என்பது வள்ளுவரின் ‘ஆணை!

செவ்வியான் கண் இருக்கவேண்டிய ஆக்கம், அவ்விய நெஞ்சத்தான் கண்ணும், அவ்விய நெஞ்சத்தான் கண் இருக்கவேண்டிய கேடு செவ்வியான் கண்ணும் இடம் மாறி விட்டன. இடம் மாறினமைக்குக் காரணம், அவ்வியநெஞ்சத்தானின் தீய ஆற்றலும், செவ்வியானிடம் உள்ள வலிமையற்ற நற்பண்புகளுமாகும். சமூகத்தில் ஏற்பட்டுள்ள முறைப் பிறழ்ச்சியை மாற்றியமைப்பது அறிஞர் கடன்! அரசின் கடன்! என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறைமொழி மாந்தராகிய திருவள்ளுவர் ஆணையிட்டது, இன்று உலக அரங்கில் செயற்படுகிறது.

அதன் பயனாக நல்லவர்களாகிய உழைப்பாளர்களுக்கு உலகம் உரிய பங்கை மரியாதையைத் தரச் சட்டங்கள் இயற்றுகின்றன. நெறிமுறைப்படுத்துகின்றன!

ஆதலால், அவ்விய நெஞ்சத்தான்கண் ஆக்கம் இருத்தல் இயல்புமன்று; அறமுமன்று, முறையுமன்று. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம், அறம் விழைவோரால் வெறுக்கத் தக்கது; மாற்றத்தக்கது. செவ்வியான் கேடு நீதியொடு படாதது; நெறிக்கு இசைவில்லாதது; மாற்ற வேண்டியது; மாற்றப்பட வேண்டியது. அன்றே சமூகநீதி விளங்கி மேன்மையுறும்!

இதுவே திருவள்ளுவர் கருத்து!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை

தொகுதி-1
www.voiceofvalluvar.org