திரு. குறளகன், கரூர்
தமிழ்ப் படித்துத் தமிழாசிரியர்களாகப் பணியாற்றிய, பணியாற்றுகின்ற எத்தனை பேர் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டு தங்களுடைய சொந்த நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவிடுவார்கள் என்று பார்த்தால் நூறு பேர் கூட தேறமாட்டார்கள். அவர்கள் பள்ளிப் பாடம் நடத்தும்போது சொல்லும் திருக்குறள்கள் படித்தும் பேச்சின் போது எதாவது ஒரு திருக்குறளை மேற்கோளாகக் காட்டுவதும் அரிதாக முனைவர் பட்ட ஆய்வுகள் செய்யும்போது திருக்குறளைக் கையாள்வதுமே போதும் என்று நினைகிறார்கள்.
தங்கள் பெயரையே மாற்றிக் கொண்டு குறளன்பன், குறளடியான், குறளகன், குறள் வேந்தன் என்று மக்களிடத்தில் குறள் பரப்பும் பணியைச் செய்பவர்களை எல்லாம் மேற்குறிப்பிட்ட தமிழாசிரியர்களை விட ஒரு படி மேலாகவே கருதுகிறேன். அதிலும் குறிப்பாக நம் கரூர் குறளகன் அங்கு வாழும் வள்ளுவர் செங்குட்டுவனோடு இணைந்து அவரது பணிகள் பலவற்றையும் முன்னெடுத்துச் செய்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியதொன்று.
மேற்கு மண்டல மூன்றாவது திருக்குறள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு மாநாட்டை திட்டமிட்டுச் செய்தவர். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும், மருத்துவர். இரமேஷ் பி.டி.கோச் தங்கராசு, எஸ்தர் குமாரசாமி போன்றவர்களைச் சந்திக்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். 80 வயதானதால் விரைந்து செயல்பட முடியாத உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அம்மாநாடு வெற்றிபெற உழைத்தவர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கீரனூரைச் சேர்ந்தவராயினும். கரூர் பகுதியில் பணியாற்றி அங்கேயே தங்கி தமிழ்ப் பணியும் திருக்குறள் பணியும் ஒரு சேர ஆற்றி வருகிறார். அண்மையில் மா.செ. தமிழ்மணியன் கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை அறிவித்த வைகாசி முற்றோதல் நிகழ்ச்சியை கரூர் வள்ளுவர் கலை மாற்றும் நிர்வாக இயல் கல்லூரியில் சிறப்பாக நடத்த உதவியவர்.
தமிழைப் பிழையற எழுதவேண்டும், பேசவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர். அதற்காக ‘தென் மொழி’ இதழில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். கரூர் திருக்குறள் ஆய்வு மையத் தலைவராக இருந்தும் நூல் வெளியீடுகளில் மெய்ப்புத் திருத்தும் பணிகளில் ஈடுபட்டும் தமிழ்ப்பணியும் ஆற்றி வருகிறார் .
அத்தகையவரை திருக்குறள் திருத்தொண்டராக ஆவணப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.