திரு. குறளன்பன், மயிலாடுதுறை
கல்விக் கண் தந்த காமராசர் தொண்டராக இருந்து மயிலாடுதுறையில் அறக்கட்டளை நிறுவி பள்ளி மாணவர்களுக்குப் பரிசளித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செகநாதன் திருக்குறள் தொண்டராகி குறளன்பன் எனப் பெயர் வைத்துக் கொண்டு எங்களோடு இணைந்து பணியாற்றுவது ஒரு வரலாறு. தன் முன் முயற்சியால் இருநூறு பள்ளிகளில் புரவலர் திட்டத்தைக் கொண்டுவந்த குறளன்பன் அங்கெல்லாம் திருக்குறள் பரப்புரையும் செய்து சிறு சிறு நூல்களையும் அன்பளிப்பாக அளித்து வருவார். திருவள்ளுவர் ஞானமன்ற அனைத்து மாநாடுகளிலும் பங்காற்றியும் உதவி செய்தும் அதன் வெற்றிக்குப் பாடுபட்டவர் குறளன்பன்.
நான் குறள் அரசுக் கழகத்தில் முழுமையாகப் பணியாற்றிய போது அதன் வெற்றிக்கும் என்னோடு பாடுபட்டவர். சென்னையில் குறள் அரசுக் கழகம் சார்பாக திருவள்ளுவர் சிலைத் தேரோட்டமும், நடைப்பயணமும் நடைபெற்றபோது ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் அதை தொடர்ந்தவர். ஊரிலிருந்து கடுமையான அழைப்பு வந்த போது நண்பர் மாணிக்கம் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார். அத்தகைய அதிதீவிரதத் தன்மை பேரிழப்பாகக் கூட சில சமயம் மாறிவிடும். நண்பர் குறளன்பன் என்னோடும் மீண்டும் ஒரு பயணத்தில் கேரளம் வரை வந்தார். வா. மு. சேதுராம், சிவானந்தர் ஆகியோருடன் மதுரையிலிருந்து கூருமலை வரை பரப்புரைப் பயணம் சென்று வந்தோம்.
அந்தப் பயணத்தின் முடிவில் செயங்கொண்டசோழபுரம் திரும்பியவுடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் குறளன்பன். இனி திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நான் தொடர்ந்து தங்கி விடுகிறேன். இந்த அமைப்பின் தலைமையிடமாக உள்ளதால் 50 நாற்காலி களை என் பொறுப்பில் வாங்கித்தருகிறேன் என்று கூறினார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் நான் அதை ஏற்கவில்லை. அவரை ஊருக்கு அனுப்பி வைத்தேன். அப்படியும் 20 நாற்காலிகளை வாங்கிக் கொடுத்துவிட்டுதான் ஊருக்குச் சென்றார். ஒருவர் தீவிரமாக ஒரு செயலில் வீட்டைக் கூட மறந்து விடுவார்கள் என்பதற்கு இது சான்று.
இப்போதும் மயிலாடுதுறை பேரவையில் முழு ஈடுபாட்டுடன் கலந்துக்கொள்ளும் திருக்குறள் தொண்டர் குறளன்பனை இவ்வரிசையில் சேர்த்ததன் வாயிலாக இந்நூலுக்கே பெருமைதான்.