அமரர் திரு. குறளடியான், கோவை
இவர் தமிழக அரசின் உள்ளாட்சித்துறையில் ஒன்றிய ஆணையர். ஆனால், அவர் தான் தன் பெயரை குறளடியான் என்று வைத்துக்கொண்டு ஓய்வு பெற்று 20 ஆண்டுகளாக திருக்குறள் பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? கோவை கங்கா மருத்துவமனையில் என் பேரன் பரணி அழகனுக்கு கால் அறுவை சிகிச்சை. இது அவனுக்கு உறுப்பில் நான்காவது அறுவை. அதற்காக நான் மருத்துவமனையில் இருந்தபோது அவரோடு தொடர்புக்கொண்டேன்.
நேரில் வரமுடியாதிருந்த என் நிலையைத் தெரிந்துக்கொண்டு தன்னாலும் பேருந்தில் ஏறிப் பயணம் செய்ய முடியாததால் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு என்னைச் சந்திக்க வந்தார். ஒரு தேநீர்க் குடிக்கும் அரைமணி நேரத்தில் அவரையும் அவரது சிந்தனையையும் அறிந்தபோது அதிர்ந்து போனேன்.
குறள் மலைச் சங்க நிறுவனர் இரவிக்குமாரின் அரிய செயலைக் கண்டு தன்னுடைய ஓய்வூதிய பணத்திலிருந்து மாதந்தோறும் ஐயாயிரம் (5,000) அனுப்புவதை தெரிவித்தபோது திருக்குறள் உலகம் உள்ளவரை நிலைக்கச் செய்ய வேண்டுமென்ற நமது முயற்சிக்கு நல்ல துணை கிடைத்தது என்று மகிழ்ந்தேன். அவரது மகள் ஒருவர் நான் பணியாற்றிய பெரியகுளத்தில் ஆசிரியராகப் பணியாற்றுவதைக் கூறியபோது இன்னும் நெருக்கமானோம்.
கோவை முத்தமிழ் மன்றத்தின் 800 வார நிகழ்ச்சியிலும் சிற்றுண்டி தேநீர் வழங்கியவர் அவர் என்று அந்நிறுவனத்தின் தலைவர் கூலவாணிகர் இராமசாமி சொன்னபோது குறளடியானைக் குறித்த பிம்பம் மேலும் உயர்ந்தது. அத்தகையத் தொண்டர் ஒரு திங்களுக்கு முன்(2017 ) திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மறைந்து விட்டார் என்று அறிந்தபோது மிகவும் வேதனை அடைந்தேன்.
காலமும் இடமும் (Time and Space) எத்தகைய ஆற்றலானது என்ற இயற்கையின் அருமையை எண்ணி நெகிழ்ந்தேன். பறக்கக் கூடிய ஆற்றல் இருந்தால் அடுத்த சில மணிகளில் நான் கோவையில் இருந்திருப்பேன். ஒரே ஆறுதலான அமரர் குறளடியான் திருவுருவப் படத்தை திருவள்ளுவர் ஞானமன்றத்தில் (18.06.2017) திறந்தேன் . அவர் 1330 குறள்களுக்கும் தனித்தனியே கட்டுரை எழுதி குறள் மன்றச் சங்கத்தில் கொடுத்துள்ளார்.
குறளடியான் புகழ் ஓங்குக! அவர் வழியில் செல்வோம்!!.