திரு. குப்புசாமி (எ) செவ்வியன், (ஆம்பலாப்பட்டு, ஒரத்தநாடு), நீலாங்கரை,சென்னை.
“திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கி இயக்குனர் வீ. சேகருடன் இணைந்து திருக்குறள் பணியும், சமுதாயப் பணியும் ஆற்றி வருபவர் செவ்வியன். நீலாங்கரையில் வாழ்வியல் மன்றம் மூலமாக தொடர்ந்து திருக்குறள் வாழ்வியலாக்க பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார். தற்போது வயது மூப்பின் காரணமாக வகுப்புகள் நடத்துவதில்லை.அவர் அனுப்பிய 40 நூல்கள் வெளியீட்டுவிழா அழைப் பிதழில் நான் வணங்கும் திருவள்ளுவரும், நான் போற்றும் கார்ல் மார்க்சும், நான் மதிக்கும் தந்தை பெரியாரும், நான் வியக்கும் விவேகானந்தரும் ஒன்றாகக் காட்சியளித்தார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரும், இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்து சமூக சேவையும், அனைத்துலக மக்கள் தொண்டும் ஆற்றிய இந்த மூன்று நான்கு பேரின் சாராம்சமாகவே செவ்வியன் விளங்குகிறார். அவரது சிந்தனையும், எனது சிந்தனையும் ஒரே நேர்க் கோட்டில் அமைந்தது வியக்கத்தக்கது.
என் மகன் ஒருவனின் பெயர் இலெனின் விவேகனந்தர், மற்றொருவனின் பெயர் கண்மணி காரல்மார்க்ஸ். ஒரு பேரனுக்குப் பெயர் ஆதிபகவன், பேத்தியின் பெயர் ஆதிபனிமொழி. ஒரு மகளுக்குப் பெயர் புதுக்கவிதை, இன்னொருத்திக்குப் பெயர் செம்மலர். இவை எல்லாமே தமிழுக்கும் திருக்குறளுக்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய ஒரு கடமையாகவே பெயர் வைத்தேன். அதுபோலதான் செவ்வியன் சிந்தனையும் அவர் எழுதிய நூல்கள் அவரின் தொண்டினை அளக்க உதவுகின்றன. பொதுஉடைமையாளராக வளர்ந்து சமூகசிந்தனையாளராகப் போராடி ஆன்மீகவாதியாக மலர்ந்து இறுதியில் வள்ளுவத்தில் ஐக்கியமானவர் செவ்வியன் என்று சொல்லலாம். இந்த நேர்மையானவர்களால் உருவாக்கப்படும் சமுதாயம் உன்னதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தஞ்சை மாவட்டம் ஆம்பலாப்பட்டில் பிறந்து வளர்ந்து தான் ஊரை அவர் சித்தரிக்கும் பாங்கும் அதில் தன் ஆசிரியர்களும் பெரியோர்களும் தன்னை வழி நடத்திய பாங்கும் நன்றியுணர்வோடு வெளிப்படுத்தப்படுகிறது.சென்னைக்கு வந்தாலும் வேரை மறக்காமல் தனது கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு , மற்ற ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களுடன் சேர்ந்து அறக்கட்டளை அமைத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புரவு பணி ஆற்றி வருகிறார் . சான்றோனாகப் பார்த்து மகிழ்ந்த அவர் அன்னைக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே முன்மாதிரியான திருக்குறள் தொண்டராக செவ்வியனைக் கருதலாம்.