திரு. குப்பன், திருவண்ணாமலை.
“திருவள்ளுவர் திருவுருவத்தை” சூடிக்கொண்டு நாடு முழுவதும் நடக்கும் திருவள்ளுவர் திருவிழாக்களில் இவரைப் பார்க்கலாம். அதற்கான முன்னெடுப்பை இவர் செய்யும் போது இவர் மனைவியும் இல்லத்தாரும் மகிழ்ச்சியாக அனுப்பிவைப்பது அவர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக, அனைவருக்கும் கல்வித்திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் இப்படித் திருவள்ளுவரைத் தாங்கி நிற்பது தமிழ்நாட்டின் தவப்பயன் என்று தான் சொல்லவேண்டும்.
திருக்குறளை மக்கள் மயமாக்க வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு மிகப் பொருத்தமானவராக இருப்பதால் எப்போதும் இவர் எனது வட்டத்திலேயே இருப்பார். ஞானமன்றம் நடத்தும் அனைத்து மாநாடுகளுக்கும் தவறாது வந்து கலந்துக்கொள்வார். தென்காசி திருக்குறள் கழகத்தில் நடைபெறும் ஒன்பது நாள் திருவிழாவிலும் முழுமையாக இருந்து வருபவர்களை ஒருங்கிணைப்பார்.
இவர் திருவண்ணாமலை நகர் முழுவதும் திருக்குறளை சுவர் எழுத்தில் எழுதி வைப்பது, அண்ணாமலையாரை வணங்கவரும் பக்தர்களுக்கு இணையாக திருக்குறள் முற்றோதல் நண்பர்களோடு ஓதி மலைவலம் வருவது மற்ற அமைப்புகளோடு இணக்கமாக இருந்து அவர்களுக்கு உதவுவது என்று குப்பன் வாழ்வது திருக்குறளே வாழ்வதாகவே கருதுகிறேன்.
திருக்குறள் தொண்டு மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி திருவண்ணாமலை தமிழ்ச்செல்வி போன்ற அனைவரையும் ஒருங்கிணைக்கும் திறன் பெற்ற குப்பன் திருவள்ளுவர் திருத்தொண்டர் வரிசையில் சிறப்பான இடம் பெறுவார் என்பது உறுதி!