வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த அடிகளார்
வறுமையில் வாடிய இரங்கநாதன்! நன்றி மறவா அடிகளார்!!
ந.மு. வேங்கடசாமி நாட்டார், சர்க்கரைப் புலவர், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சா. சோமசுந்தர பாரதியார், அருட்டிரு விபுலானந்த அடிகள் போன்ற பெரியவர்களுடன் எல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு, ‘பால் ஊற்றும் பையனாக இருந்த இரங்கநாதனுக்குக் (அடிகளாருக்குக்) கிடைத்தது!
அடிகளார் வீட்டுக்கு அப்போது தொழில் பால் வியாபாரம். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சிறுவனாக பால் ஊற்றச் சென்றகாலம். வாழ்க்கையின் அடிப்படைகள் அமைந்த காலம்.
இவர்களுள்ளும் ‘சொல்லின் செல்வர்’ ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழ் கற்கும் ஆர்வத்தைத் தூண்டி வளர்த்தார்கள். பிள்ளையவர்களுடைய வீட்டுக்குச் செல்லும்போது அவருடைய அறையின் ஜன்னல் அருகில் நின்று ஒரு குறள் சொல்ல வேண்டும். குறள் ஒப்பிக்கும் அடிகளார் குரல் கேட்டவுடன் பிள்ளையவர்கள் காலணா கொடுப்பார்கள்.
சாதாரணமாகப் பிள்ளையவர்கள் பிரியமாக நடத்தினார்கள். குன்றக்குடி அடிகளார் திருவேட்களம் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது சாரணர் குருளையர் அணியில் சேரும்படி ஆசிரியர் கூறினார். அவரும் ஒப்புக்கொண்டார்.ஆனால், வீட்டில் குருளையர்க்குரிய சட்டை தைத்துக் கொடுக்க மறுத்து விட்டார்கள். வசதிக்குறைவே காரணம், அன்று பாலூற்றச் சென்றபொழுது பிள்ளையவர்கள் முகப்பிலேயே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். அடிகளார் பாலை,வீட்டுக்கு முன் வந்தவரின் பாத்திரத்தில் ஊற்றிவிட்டு பிள்ளையவர்கள் முன்வந்து நின்றார். அன்றைய குறளை ஒப்பஇத்தார். ஈதல் அதிகாரத் தொடர்புடைய குறள் அது! ஏன் எனில், திருக்குறளைக் கேட்ட பிள்ளை அவர்கள் “என்ன
வேண்டும்?” என்றார்கள். அடிகளாருக்கு குருளையர் சட்டை கேட்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால் பயம் ! கேட்கத் தோன்றவில்லை! தயக்கமும் அழுகையும் வந்தது, உடனே பிள்ளையவர்கள் அடிகளாரை அருகில் அழைத்து “ஏன் அழுகிறாய்.. என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள்.”குருளையர் சட்டை வேண்டும்” என்று கேட்டார் அடிகளார்.
“ஏன் வீட்டில் வாங்கித் தரவில்லையா?” என்றார்கள்.
“வசதியில்லை என்று கூறிவிட்டார்கள்” என்றார் அடிகளார். “உன் வீட்டில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டார்கள். ”அம்மா, அண்ணன் இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னார். “அண்ணன் என்ன செய்கிறார்?” என்று கேட்டார்கள் பிள்ளையவர்கள். “பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கிறார். பெயர் கோபாலகிருஷ்ணன்” என்று பதில் கூறினார்.
“அப்படியா? சரி” என்று சொல்லிவிட்டு ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள் பிள்ளையவர்கள். குருளையர் சட்டை தைத்துக் கொண்டார். அதன்பிறகு பிள்ளை அவர் களுடன் உறவு நிறை நிலாப்போல வளர்ந்தது. பிள்ளையவர்கள் அடிகளாரின்அண்ணன் கோபாலகிருஷ்ணனை, பல்கலைக் கழக அறைக்கு அழைத்து விவரங்களைத் தெரிந்து கொண்டு, குடும்பத்தையே வளர்த்தார். வசதியில்லாத குடும்பத்துக்கு வசதி உண்டாக்கினார்.
ஏன்..இன்றும் உடல்நலத்துடன் கற்குரிய காரணம் பிள்ளையவர்கள் வீட்டுத் தயிர்ச் சோறும் வடகமும் என்பதை நினைவு கூர்வதில் மகிழ்வு ஏற்படுகிறது என்று அடிகளார் நன்றியோடு நினைந்து கூறுகிறார்.
அடிகளார் தந்தை பரம்பரையாக இருந்த ஐந்து வேலி நிலத்தை விளையாடித் தோற்றுவிட்டார். பிள்ளையவர்கள் வழக்கறிஞராயிற்றே! குடும்பச் சொத்தை மீட்க வழக்கு ஆலோசனைகளும் நிதியும் கொடுத்து உதவினார்கள். சொத்தும் கிடைத்தது. அந்த நன்றிக்கடனுக்கு அடிகளார் குன்றக்குடி வந்த பிறகு 1953-ம் ஆண்டில் பிள்ளையவர்களைக் குன்றக்குடிக்கு அழைத்துப் பாராட்டி வைர மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
— மு. வரதராசன்
தொகுப்பு
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
24/07/2024
ஆதாரம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நூல் வரிசை-16 (பக்கம் 72 )