சிறப்புத் தொடர்-3
வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த அடிகளார்
எங்கெங்கு காணினும் சராசரி மனிதர்கள் !
பொறாமையின் விளைவாக எழுவது புறம் கூறுதல் .
புறம் கூறுதல் என்பது ஒருவர் இல்லாத போது, அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக மற்றவரிடம் எடுத்துக் கூறுவது அவருக்குத் தெரியாமல்
பொறாமை ஏன் எழுதுகிறது ?
ஒருவரிடம் உள்ள செல்வம் ,அவருடைய பதவி ,புகழ் இவற்றில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ கண்டு அதைப் பொறுக்க முடியாமல் ,மனதில் பொறாமை எழ வாய்ப்பு உள்ளது .
பொறாமைக்கு மனத்தில் இடம் கொடுக்கக் கூடாது .
“அழுக்காறு என ஒரு பாவி” ,ஒப்பற்ற பாவி என்பதால் ஒரு பாவி என்று வள்ளுவர் கூறுவார்.
பொறையுடமை ,அழுக்காறாமை ,புறங்கூறாமை என்ன மூன்று அதிகாரங்களில் வள்ளுவர் இது குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்
பொறுமை இன்மை, பொறாமை , கோள் கூறுதல் இம்மூன்றும் தீய குணங்கள் ; இந்த மூன்று குணங்களும் ஒருவரை அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . இல்லையெனில் அவை இந்த குணங்கள் உடைய மனிதனையும் அவனது சுற்றத்தையும் அழித்து விடும்.
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். (குறள் 184)
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா. (சாலமன் பாப்பையா )
ஆதினத் திருமடங்கள் சமயத்தின் மூலமாக அறத்தை வளர்க்க முயற்சிப்பவை. ஆனால் அங்கே இருப்பவர்களும் சராசரி மனிதர்கள் தானே….
குன்றக்குடி அடிகளார் சின்ன பட்டமாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறுவதை அவருடைய எழுத்துக்கள் மூலமாகவே காண்போம்…
‘ஓர் ஆட்சிக்கு பின்வரும் ஆட்சிக்கும் உள்ள இடை வெளி அவ்வளவு சிறப்பாக அமையாது’ என்று இலக்கியங்கள் கூறும். ஆதீனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் பெரிய பட்டம் சின்னப் பட்டம் என்ற அமைப்பின் ஆயுள் நீடிப்பது நல்லதல்ல நாம் 33 மாதம் சின்னப் பட்டமாக இருந்தோம். முதல் ஆறு மாதங்கள் சிக்கலின்றி ஓடியது. மெள்ள மெள்ள வாடகைதாரர்கள். குத்தகைதாரர்கள் நம்மைப் பார்க்கத் தலைப்பட்டனர்.
இது ஆதீனம், திருக்கோயில் அலுவலகங்களில் வேலை பார்த்தவர்களுக்குப் பிடிக்க வில்லை; ஏன்? எதனால் உய்த்துணர்க!.
நமது நாட்டில் கையூட்டு (லஞ்சம்) தோன்றிப் பலநூறு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அது சிரஞ்சீவித்தன்மை வரமும் பெற்றிருக்கும் போலும்! இந்தத் தலைமுறையில் நாம் செய்திருப்பதெல்லாம் கையூட்டை (லஞ்சத்தை) தேசிய மயமாக்கி இருப்பதுதான் !
மாமூல் பாதிக்கும் என்று அஞ்சியவர்கள் கோள் சொல்ல ஆரம்பித்தார்கள். 1950-தைப் பூசம்! திருவண்ணாமலை சமயச் சொற்பொழிவுக்கு நாம்
சென்றிருந்தோம்! புகை வண்டிப் பயணம். பேசிமுடித்து விட்டு அன்று இரவே பயணமாகி காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். ஆதீன மடத்துக் கார் வரவில்லை, அலுவலகத்தைச் சேர்ந்த எழுத்தர் சா. சொக்கலிங்கம் என்பவர் மட்டும் வந்திருந்தார். இவரும் ஆதீனச் சார்பிலோ மகாசந்நி தானத்தின் உத்தரவுப்படியோ வரவில்லை.
இவர் நம்மால் பணியில் சேர்க்கப் பெற்றவர். அந்த நன்றி உணர்வில் வந்திருந்தார். இவர் நம்பால் நல்லன்பு கொண்டவர். இவர் இப்போது ஆதீன அலுவலகத்தில் வருவாய்த் துறைப் பொறுப்பாளராகப் பணி செய்கிறார். பணி செய்வதில்ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையவர்.ஒரு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு இருவரும்குன்றக்குடி வந்தோம். காரில் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. மௌனமே!
குன்றக்குடி வந்தவுடன் பூஜை மடத்தில் வழிபாடு நிகழவில்லை என்பதை அறிந்து, வழக்கம்போல் நாம் வழிபாட்டுக்குச் சென்றோம். வழிபாடுமுடிந்தவுடன் சொக்கலிங்கத்தை தனிமையில் அழைத்து,”என்ன நடந்தது?” என்று கேட்டோம்! சா. சொக்கலிங்கம்,
“மகா சந்நிதானத்துக்குக் கோபம் வந்திருக்கிறது. செட்டில் மெண்ட்டை ரத்து செய்ய மதுரை சென்றிருக்கிறார்கள்” என்று சொன்னார். இந்தச் செய்தி நம்மை பாதிக்கவில்லை.
இந்த உலகத்தில் இன்பம் மட்டுமா உண்டு? துன்பமும் உண்டு! இனிமையும் உண்டு! கசப்பும் உண்டு! இனிமையையும் கசப்பையும் சேர்த்து விழுங்குவதுதான் ஒழுக்கம்.
முதல் நாள் இரவு கண்விழிப்பு. ஆதலால் தூங்கச் சென்றுவிட்டோம். நிம்மதியாகத் தூங்கினோம்! மாலைப் பொழுதாகி விட்டது. மகாசந்நிதானம் மதுரையிலிருந்து வரவில்லை. இரவு எட்டு மணிக்குத்தான் வந்தார்கள். ஆதீனமடம் வழக்கம்போல் இருந்தது. நாம் தங்கியிருந்த அறைக் கதவை இரவு பத்து மணிக்கு ஆதீனத்தின் உயர் அலுவலர் வி. கிருஷ்ணன் தட்டினார்.இரவு பத்து மணிக்கு நம்மை நாடி வந்த ஆதீனத்தின் உயர் அலுவலர் வி. கிருஷ்ணன் ஏதோ சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமல் தவித்தார். நாம் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கொடுத்துக் கேட்டோம்!
மகாசந்நிதானத்திடம் சில அலுவலர்கள், சின்னப் பட்டமாக இருக்கும்போதே அதிகாரத்தைப் பெற நாம் முயற்சி செய்வதாகவும் மகாசந்நிதானத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகச் சொன்ன தாகவும் அதை நம்பி மகாசந்நிதானம் கோபத்தில் செட்டில் மெண்டை ரத்துசெய்ய மதுரை வழக்கறிஞர் சீனிவாச ஐயங்காரிடம் சென்றதாகவும், ஆனால், சீனிவாச ஐயங்கார் நிறைய எடுத்துக்கூறி செட்டில்மெண்டை ரத்து செய்யும் ஆலோசனையைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார் வி. கிருஷ்ணன்.
“அதன்பின் திருப்புத்தூருக்கு வந்து வழக்கறிஞர் ராமசந்திரன் பிள்ளையிடமும் ஆலோசனை கேட்டார்” என்றார். ராமச்சந்திரன் பிள்ளை நல்ல வழக்கறிஞர். திருப் புத்தூரில் வாரவழிபாடு நடத்தியவர். ஆதி திராவிடர்களுக்கு ராஜாஜி பெயரில் ஒரு விடுதியும் நடத்தியவர். இப்போது இவர் அமர நிலை. இவரது அருமை மகன் ரத்தினசாமி, மாவட்ட உரிமையியல் மன்ற நடுவராகப் பணி செய்து வருகிறார். “வழக்கறிஞர் ராமச்சந்திரன் பிள்ளையும் செட்டில்மெண்டை ரத்துசெய்யும் யோசனையை வரவேற்காமல் நிறைய எடுத்துக்கூறி அனுப்பி விட்டார்” என்றசெய்தியையும் வி. கிருஷ்ணன் கூறினார்.
“சரி . போங்கள்!” என்று கூறி வி. கிருஷ்ணனை அனுப்பிவிட்டு மீண்டும் தூங்கினோம். நமது மனதில் எந்தச் சலனமும் இல்லை.
மறுநாள் காலை வழக்கம்போல் பூஜைமடத்தில் வழிபாடு செய்துவிட்டு, மகாசந்நிதானத்திடம் திருநீறு பிரசாதம் கொடுக்கச் சென்றோம்! தந்தோம்! மகாசந்நி தானம் வாங்கிக்கொண்டார்கள். நமக்குத் திருநீறும் தந்தார். ஆனால், முகத்தோடு முகம் பார்க்க இயலவில்லை. சிரித்து நோக்கும் பார்வை கிடைக்கவில்லை. இப்படிச் சில நாட்கள் ஓடின.
இடையில் சா. சொக்கலிங்கம் ஒரு தவறு செய்து விட்டார். அதாவது, இந்தப் பிணக்குச் செய்தியை தருமபுரம் ஆதீனத்துக்கு எழுதி விட்டார். அங்கிருந்து ஒரு அலுவலர் வந்தார். நம்மை விசாரித்தார். நாம் “ஒன்றும் இல்லை. எல்லாம் நன்றாக நடக்கிறது” என்று கூறி அனுப்பி விட்டோம்.
குன்றக்குடிக்கு வந்து தொழும்பா இருப்பதாக முடிவு செய்தபிறகு தருமபுர ஆதீனத்துக்குச் சொல்வதும் பரிகாரம் தேடுவதும் மரபன்று, கண்ணகி சொன்ன ‘பீடன்று’ என்பது இல்வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. துறவறத்துக்கும் பொருந்தும் அல்லவா!
சில நாட்கள் ஓடின. வழக்கம்போல் நாம் மகா சந்நிதானத்துக்கு மாலை நேரத்தில் விசிறிக்கொண்டிருந்தோம்.செவ்வி பார்த்து, செய்த பிழையாதென அறிய மகாசந்நிதானத்திடம் விண்ணப்பித்துக் கொண்டோம்.
உடனே மகாசந்நிதானம் தக்கன் வேள்வித் தீயென, “நீங்கள் தான் அதிகாரத்தைப் பறிக்கச் சூழ்ச்சி செய்கிறீர்களே! நான் மரணமடைய மந்திரம் செய்கிறீர்களாமே?” என்றார், உடனே நாம் விசிறியைக் கீழே வைத்துவிட்டு மகாசந்நிதானத்தின் முன்வந்து நிலத்தின் மிசை வீழ்ந்து வணங்கி “இப்பிறப்பில் ஏதும் பிழை செய்யவில்லை. வலிந்து அழைத்தும் பட்டமேற்க மறுத்த எனக்கு அதிகார ஆசையா? ஒருபொழுதும் இருந்ததில்லை. இனிமேலும் வராது. மகாசந்நிதானம் உண்மை தெரியவேண்டும்!” என்று கூறி வேண்டிக்கொண்டு திரும்பத் திரும்ப வீழ்ந்து வணங்கினோம்.
மறுத்த எனக்கு அதிகார ஆசையா? ஒருபொழுதும் இருந்ததில்லை. இனிமேலும் வராது. மகாசந்நிதானம் உண்மை தெரியவேண்டும்!” என்று கூறி வேண்டிக்கொண்டு திரும்பத் திரும்ப வீழ்ந்து வணங்கினோம்.
அருகில் நின்ற ஏவலர் சின்னச்சாமி பிள்ளையிடம் சில அலுவலர்களை அழைத்து வரும்படி உத்தரவு செய்தார். அவர்களும் வந்தனர். ஒவ்வொருவரும் ‘அவர் சொன்னார்! இவர் சொன்னார்!’ என்றார்களே தவிர, நிரூபணம் செய்ய வில்லை. மகாசந்நிதானம் மிகவும் வருத்தப்பட்டார். நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டார். கோள் சொல்லிய இருவரை உடனே பணியிலிருந்து நிறுத்தினார். நாம் பரிந்துரை செய்து… திரும்ப அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.