Skip to content

கம்ப இராமனும் வால்மீகி இராமனும்

  • by

நாமக்கல் கவிஞர் கூறுகிறார்….

“கம்பனா இராமாயணத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தினது? இது உண்மைக்குப் பொருந்துமா? மிகவும் குறைத்துச் சொன்னாலும், கம்பன் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அந்த இராமன் தமிழ் நாட்டில் அசைக்க முடியாத இடம் பெற்றுவிட்டதுமல்லாமல் தமிழர்களுக்குத் தெய்வமே ஆகி விட்டானே! அந்த இராமனைத் தமிழ்நாட்டைவிட்டு ஓட்டிவிட முடியாதென்று கண்டுதானே கம்பர், அந்த இராமனுக்குத் தமிழறிவைக் கொடுத்துத் தமிழ்ப் பண்புகளைப் பூட்டி, தமிழ் வழக்க ஒழுக்கங்களைக் கற்பித்து திருக்குறளைப் போதித்து, அறங்களுக்குத் தலைவனாக்கித் தமிழர்கள் மட்டுமன்றி எல்லா மனிதர்களும் வணங்கத்தகுந்த பரம்பொருளாக்கினார்?

கம்பருக்கு முன்னால் நெடுங்காலமாகத் தமிழர்கள், வடமொழி அறிஞர்களைக்கொண்டு வால்மீகி இராமாயணத்தைப் படித்து மொழிபெயர்த்துச் சொல்லச் செய்தே இராமனை தெய்வமாகப் போற்றி வந்தார்கள். வால்மீகி இராமாயணத்தில் அரைகுறையாகச் சொல்லப்பட்ட அவதாரத்தைப் பூரணமாக்கிக் கதைப் போக்கிலிருந்தே குற்றங் குறைகளை நீக்கிவைத்ததுதான் கம்பர் செய்த காரியமெல்லாம். இராமனைத் தமிழ் நாட்டில் புகுத்தியது கம்பரல்லர். இந்த உண்மையை நாம் நன்றாக உணரவேண்டும். தமிழ்ப் படிப்புள்ளவர்களிலும் அதற்கென்று பழைய தமிழிலக்கியங்களில் கவனம் செலுத்தினவர்கள்தாம் இதைக் காண முடியும். இப்போதே அதில் சற்றுக் கவனம் செலுத்துவது மிக்கப் பயனுடையதாகும்.”

முழு நூலும் படிக்க…..

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0749.html

மீள் பதிவாக

கதையோடு சேர்த்து அறத்தைச் சொல்லும் போது ..அறம் ஆழமாக சென்று பதியும் அதற்கு கம்பர் தேர்ந்தெடுத்த களம் இராம காதை

தமிழுக்குக் கதி கம்பரும் திருவள்ளுவரும் என்று பேராசிரியர் திருமணம் செல்வ கேசவராய முதலியார் அவர்கள் கூறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

வால்மீகி ராமாயணத்தை எடுத்து, கம்பர் திருக்குறள் கருத்துகளைச் சொல்வதற்காக பல்வேறு மாற்றங்களைச் செய்கிறார். எல்லாம் மிக விரிவாக பேராசிரியர் தெ ஞானசுந்தரம்அவர்கள், வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது ஆய்வு நூல் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்

கம்பர் செய்த மாற்றங்கள் பல…அவற்றில் ஒன்று …

உச்சகட்டமான குடிசூட்டு விழா யார் யார் ராமனை சுற்றி இருக்கிறார்கள் என்பதை கம்பர் பட்டியலிடுகிறார்

எல்லோருக்கும் தெரிந்த பாடல் “அரியணை அனுமன் தாங்க “…ஆனால் அதற்கு முன்னால் ஒரு பாடல் இருக்கிறது

அந்த பாடலில்

இராமர் முடிசூட்டுவிழாவின் போதுஅவரைச் சுற்றி இருந்தவர்கள் யார் யார் என்பதை ஒரு பட்டியல் இடுகிறார் கம்பர்

அதில் இந்த பாடல் ஒரு சிறப்பான பாடல்

நல்நெறி அறிவு சான்றோர் – அறநூல்களில் கூறப்பட்ட
நல்ல வழிகளால் ஆகிய அறிவான் அமைந்தவர்கள்;

நான்மறைக்
கிழவர் – நான் மறைக்கு உரியவர்கள்;

மற்றைச் சொல் நெறி அறிவு
நீரார் – வேறுபட்ட பல்துறை அறிவிற் சிறந்த தன்மை
உடையவர்கள்;

தோம் அறு புலமைச் செல்வர் – குற்றமற்ற
புலமையால் உயர்ந்தவர்கள்;

பல்நெறிதோறும் தோன்றும்
பருணிதர்- பல்வகைப்பட்ட சாத்திரங்களினும் நுட்ப அறிவு
பெற்ற நிபுணர்கள்;

பண்பின் கேளிர் – நற்குணங்களுக்கு
உறைவிடம் ஆனவர் (ஆகியோர்);

மன்னவர்க்கு அரசன்
பாங்கர் – சக்கரவர்த்தியாகிய இராமனுக்கு அருகில்;

மரபினால்சுற்ற – அவரவர்க்கு உரிய முறைமைப் படி
சுற்றியிருப்ப.

பெரியாரைத் துணைக்கோடல் என்ற வள்ளுவரின் அதிகாரத்திற்கு இது விளக்க உரை போன்று நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது

கல்வியில் பெரியவர் கம்பர்
என்பது வெற்றுச் சொல் அல்ல
அது ஒரு வெற்றிச்சொல்

சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org