திரு. கடவூர் மணிமாறன், குளித்தலை
தமிழ்ப்பேராசிரியராகவும் மாயனூர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியபோதே தமிழுலகம் அறிந்த மேடைப்பேச்சாளர்களில் இவரும் ஒருவர். குளித்தலை என்ற உடனே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் தமிழறிஞர் கா. சு. பிள்ளை ஆவர். அதனால் அவர் பெயராலேயே நிறுவப்பட்டுள்ள இலக்கிய அமைப்பின் முதன்மைப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருக்கின்றார். திருக்குறள் பரப்புரையில் தமிழ் இலக்கியம் தழுவிய அனைத்துக் கூட்டங்களிலும் இவரைப் பார்க்கலாம்.
திருவள்ளுவர் ஞானமன்ற மாநாடு கரூரில் நடந்தபோது ஓர் அருமையான உரையை ஆற்றி வந்தவர்களையெல்லாம் அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைத்தார். நிறைய இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அத்துடன் திருக்குறள் வழி திருமணங்களை பல நூறு இடங்களில் நடத்தி வைத்துள்ளார். தமிழில் வெளியாகும் பல சிற்றிதழ்களிலும் கவிதை எழுதி தமிழின் பெருமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரிடம் பயின்ற மாணவர்களெல்லாம் இணைந்து ஒரு பெரு விழாவை இவருக்கென்றே நடத்தினார்கள்.
கடவூர் என்பது ஜமீனாகும். அந்த ஜமீனால் அவ்வூர் பெருமை பெற்றுதோ இல்லையோ ஐயா மணிமாறனால் கடவூர் பெருமை பெற்றது என்றே சொல்லலாம். மிக எளிமையாகவும் இனிமையாகவும் பழகக்கூடிய மணிமாறன் இலக்கிய இலக்கண நூல்களைப் படித்து தேர்ந்தவர் மட்டுமல்ல. பெரியதொரு நூலகத்தையும் அமைத்துப் பராமரித்து வருகிறார். குளித்தலை நடைபெறும் கா.சு.பிள்ளை நினைவு கருத்தரங்குகளுக்கு மாநிலம் முழுவதும் இருந்து அறிஞர்களை வரவழைத்து சிறப்பு செய்கிறார். அண்மையில் அவரது முயற்சியால் உலகத் தமிழ்க் கழக மாநில செயற்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஒரு சிறந்த திருக்குறள் திருத்தொண்டராக கடவூர் மணிமாறனை அடையாளம் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.