Skip to content

திருமதி. ஹெலினா, சங்ககிரி

திருமதி. ஹெலினா, சங்ககிரி

மதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கும் ஆற்றல் திருக்குறளுக்கு உண்டு என்பதற்கு சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஹெலினா ஒரு சான்று. வள்ளுவர் குரல் குடும்பத்தில் (Voice of Valluvar) உள்ள சுமார்  300 நண்பர்களும் திருக்குறள் தொண்டு செய்பவர்கள் தான் எனினும் எம்மோடு தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு சேவை செய்து வரும் அம்மையாரை திருத்தொண்டர் வரிசையில் சேர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொதுவாக உரையாடிக் கொண்டிருந்த எனக்கு அவரது மாமனார்அமரர்  எபிநேசர் கொங்கணாபுரம் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர் என்று அறிந்தபோது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், அப்பள்ளியில் அவரிடம் 1970-71 காலக்கட்டத்தில் இளந்தமிழாசிரியராகப் பணியாற்றியது நினைவுக்கு வந்தது. மிக நேர்மையான தலைமையாசிரியர், மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் கூடுதலாக அக்கறையும் கனிவும் கொண்டவர். சேலம் மாவட்டத்திலேயே புகழ் வாய்ந்த தலைமையாசிரியர்கள் வரிசையில் எங்கள் எபிநேசரும் ஒருவர். அவரது மருமகள் ஹெலினாவும், மின் வாரியத்தில் ஒரு பொறியாளராக இருந்து கொண்டே திருக்குறள் பால் கொண்ட பேரன்பால் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரைகள் செய்து வருகிறார் என்பதால் எனக்கு மிக நெருக்கமானவராகவே உணர்கிறேன்.

சொற்பொழிவுக்காக  பணம் எதுவும் வாங்குவதில்லை என்று அவர் சொன்னேபோதே திருக்குறளை வெறும் கருவியாகக் கருதாமல் பண்பாட்டுச் சின்னமாகக் கருதி அவர் உழைப்பது தெரிய வந்தது. அவன் தன் அறிவு உழைப்பு, பொருள் அனைத்தையும் செலுத்தி வள்ளுவர் காட்டும் வாழ்வியல் , திருக்குறள், வள்ளுவத்தில் மனிதநேயம், வள்ளுவர் நாட்காட்டி, திருக்குறள் புதிய உரை என ஐந்து படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

எங்கள் திருவள்ளுவர் ஞான மன்றத்திற்கு நேரில் வந்து பார்க்கிறேன். அதற்கு என்னால் ஆனா உதவியையும் வழிகாட்டுதலையும் செய்கிறேன் என்று உறுதி கூறியுள்ளார். வள்ளுவர் குரல் குடும்பத்திலுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் திரு. இராசேந்திரன்  மிக வியந்து பாராட்டும் பேச்சாளர் ஹெலி னா அம்மையார் . ஈரோடு பவானியிலுள்ள திருமதி பராசக்தியைப் பற்றி அவரிடம் நான் கூறியதும் நாளைக்கே சென்று அத்தொண்டரை நானும் பாராட்டுகிறேன் என்றார். இது தான் திருக்குறள் தொண்டர்களிடம் நான் எதிர்பார்க்கும் பண்பாகும். மற்றவர்களைப் பாராட்டுவதன் வாயிலாகத் தான் நமது புகழும் மேம்படும்.

குறள் நெறி போற்றி,பரப்பி  வாழும் பொறிஞர் ஹெலினா வாழ்க! வளர்க!!

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்