Skip to content

அருள்திரு குருபழனி அடிகள்.மதுராந்தகம்

அருள்திரு குருபழனி அடிகள், மதுராந்தகம்,காஞ்சிபுரம் (மா).

மறைமலை அடிகளின் மாணாக்கர் அழகரடிகள், தான் ஆற்றிய சமயச் சொற்பொழிவுகளோடு திருக்குறளையும் திருமறையாகப் போற்றி 1950 களில் பல திருத்தலங்களில் திருக்குறள் மன்றங்களையும் நிறுவினார். தான் வாழ்ந்த மதுராந்தகத்திலேயே திருக்குறள் அதிகாரங்கள் 133 னிலும் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களுக்கு செயல் விளக்கம் அளிக்குமிடமாக 133 ஏக்கர் நிலத்தை வாங்கி காட்சிக்கூடங்கள் அமைக்க விரும்பினார். ஆனால், அவருக்கு 100 ஏக்கர் தான் வாங்க முடிந்தது. அதில் திருக்குறள் பீடம் அமைத்துக் கல்விப் பணிகளை முதலில் தொடங்கினார். ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை தொடங்கினார். அதன் தற்போதையத் தலைவர் தான் குருபழனி அடிகள்.

அழகரடிகளின் வாரிசான இவர் அப்பீடத்தைப் பராமரித்து கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். ஆண்டிற்கு இரண்டு முறை திருவள்ளுவருக்கு விழா எடுத்து திருக்குறள் சான்றோர்களுக்கு விருது வழங்கி வருகின்றார். எனக்கும் ஒளவை நடராசன் ஐயா கையால் விருது வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் விடுதியில் அவ்வப்போது நன்கொடையாளரின் பெயரில் சிறப்பு உணவும் வழங்கப்படுகிறது. “பொது மக்கள்” என்ற திங்கள் இதழை கடந்த 50 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

குருகுலம் உயர்நிலைப் பள்ளி, குருகுலம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இப்படி ஒரு நிறுவனம் இருக்கிறது என்பது தமிழ்நாட்டில் பெரும்பாலான திருக்குறள் அமைப்புகளுக்குத் தெரியவில்லை. அனைத்து திருக்குறள் ஆர்வலருக்கும் தொடர்புடையதாக திருக்குறள் பீடம் உருவாக வேண்டும்! திருக்குறள் பீடம் செய்வோம்! திருக்குறள் நெறியில் வாழ்வோம்!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்