திரு. கோபி சிங், தஞ்சை
மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது அம்மொழி பேசும் பல குழுவினரும் வந்து தங்கி வாழ்கின்ற வரலாற்றை உடையது தஞ்சாவூர். அப்படி வந்த எத்தனையோ ஆயிரம் பேருக்கு இல்லாத சிறப்பு நம் கோபிசிங்கிற்கு அவரது மகள் பிரதிபா கிட்டியது. திருக்குறள் 1330 யும் மனனம் செய்து ஒப்பித்ததோடு தெளிவாகப் பொருளையும் சொல்லி மேடைப் பேச்சிலும் வல்லவராக அவர் மகள் விளங்கியதால் தமிழக அரசு முதன் முதலில் அறிவித்த திங்கள் தோறும் ரூ.1000/- பெரும் திட்டத்தில் பயன் பெற்றார். கோபிசிங்கின் மனைவியும் திருக்குறள் தொண்டராகவே விளங்கி அக்குடும்பத்தை புகழுச்சிக்கே கொண்டு சென்றார்.
திருக்குறள் மாமுனிவர் பேராசிரியர் கு மோகனராசு கோபிசிங்கின் குடும்பத்தோடு மிக்க பெருமதிப்போடு பழகுகின்ற காட்சி எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது. அப்படிப்பட்ட தொண்டரின் வீட்டில் தான் தஞ்சை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரான எனக்கு தங்க இடம் கிடைத்தது.
நான் நடத்திய ஞான மன்ற நிகழ்வுகளும், சிலைத் திறப்பு விழாக்களுக்கும், பரப்புரைகளுக்கும் கோபிசிங் குடும்பமே துணையாய் நின்றது. அவர் வீட்டில் என் கனவையும் மிஞ்சும் அளவிற்கு திருவள்ளுவர் சிலைகள் அவரது கருத்துரைகள் நூல்கள் என எல்லாம் திருக்குறள் மயமாக இருந்தது.
அங்கு தங்கிய 10 திங்களும் திருவள்ளுவர் குடும்பத்தோடு தங்கியதாக உணரலானேன். தஞ்சை என்றாலே கோபிசிங்கும், கோபிசிங் என்றாலே தஞ்சையும் நினைவுக்கு வருமளவு அங்கு ஒரு திருக்குறள் தொண்டரை சந்திப்பேன் என்று நினைத்ததில்லை. அப்போது அமைச்சராக இருந்த உபயதுல்லா அவர்கள் கோபிசிங்கை நேசித்து அரவணைக்கும்போது நன் நெகிழ்ந்து போனேன்.
திருக்குறள் மொழி, இன மதங்களைக் கடந்தது என்பதற்கு தஞ்சையே எடுத்துக்காட்டு . கோபிசிங்கின் மனைவி மறைந்தபோதும் அவர் திருவள்ளுவரோடேயே வாழ்கிறார்.
திருக்குறள் தொண்டர் கோபிசிங் இத்தொகுப்பின் முத்து எனவே போற்றலாம்.