திருக்குறள்: 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
https://www.facebook.com/share/1D5P3MAGTW/?mibextid=wwXIfr
பேரா. ராஜன் குறை அவர்களின் “முற்றும் முரண்கள்: மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா?” என்ற கட்டுரையை வாசித்தபோது, அதில் ஆர். பாலகிருஷ்ணன் சார் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தமிழ்மட்டுமே கற்று, இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகி (முதன்முதலில் தமிழில் எழுதி) சாதனை படைத்ததை நாம் அறிவோம்.
இதனை தொடர்ந்து, இன்றைய ஆனந்தவிகடனில் வெளியான “இப்போது வரை இந்தியில் படிக்கவோ, எழுதவோ, பேசவோ தெரியாது – ஆர். பாலகிருஷ்ணனின் அதிரடி பதிவு” என்ற செய்தியும் முகநூலில் என் கவனத்துக்கு வந்தது.
https://www.vikatan.com/education/ex-ias-officer-rbalakrishnans-statement-regarding-mother-tongue-and-hindi
ஒடியா செம்மொழி உலக மாநாடு நடத்தியும், 30 மாநிலத் தேர்தல்களை, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியும்—தமிழ் மாணவனாகவே இருந்து தமிழின் வழியே உயர்ந்த ஒருவரை பார்க்கும் போது—இவர்கள் வலியுறுத்தும் மும்மொழி கொள்கையின் தகிடுதத்தம் எவ்வளவு வெளிப்படையானது என்பதும் புரிகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராக இரண்டு முறை பணியாற்றியவர். இந்தியாவில் இந்தி தெரிந்த வட இந்திய அதிகாரிகள் பலர் இருப்பினும், ஏன் திரு. பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அழைக்கப்பட்டார் என்பதை சிந்தித்தேன்.
தேடிக்கொண்டிருக்கையில், அவரின் ஆளுமை, திறமை பற்றிய செய்தியின் சுட்டி ஒன்று என் பார்வைக்கு வந்தது. அது வருமாறு:
https://www.rediff.com/news/report/ec-gets-into-poll-mode-requisitions-outstanding-officer/20130724.htm
ஜூலை 24, 2013 அன்று வெளியான “EC gets into poll mode, requisitions ‘outstanding’ officer” என்ற தலைப்பிலான கட்டுரையில், அந்த outstanding officer நம் பாலகிருஷ்ணன் சார் தான். முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்ளா, பாலகிருஷ்ணன் Balakrishnan R போன்ற அதிகாரிகளுக்காக ஆண்டு ரகசிய அறிக்கையில் (annual confidential report) எழுதிட ‘super outstanding’ என்ற புதிய மதிப்பீட்டு தகுதி உருவாக்கப்பட வேண்டும் என்றதாக அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த, அவர் அழைக்கப்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
2013 ஆம் அண்டு பகுதிகளில், சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தது. அது என் கல்லூரி நாட்கள் என்பதால், அந்த காலகட்டம் தொடர்பான நினைவுகள் இன்னும் நெஞ்சில் பதிந்திருக்கின்றன. 2012ல் ஐ.ஏ.எஸ். அதிகாரி அலக்ஸ் பால் மேனன் Alex Paul Menon 12 நாட்கள் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சம்பவமும் அன்றைய சூழலின் தீவிரத்தைக் காட்டுகிறது. அண்ணன் அலக்ஸூம் மிகச் சிறந்த அதிகாரி. தொடர் கொலைகளில் ஈடுபட்டிருந்த நக்ஸல்கள் அலக்ஸ் அவர்களை பத்திரமாக விடுவித்ததே அதற்கு சான்று.
அப்போதெல்லாம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பற்றிய செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன (இன்றும் நல்ல அதிகாரிகளை பற்றி நான் படிப்பதுண்டு).
இத்தகைய சூழலில், 2013-ல் பாலகிருஷ்ணன் சார் சத்தீஸ்கர் உள்ளிட்ட தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரது திட்டமிடல் திறனையும், நிர்வாக ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.
சில நிகழ்வுகளில், அவர் தன் வாழ்க்கையை விவரிக்கையில் கூறியிருக்கிறார்— 2010 செம்மொழி மாநாட்டில் சிந்துவெளியில் தான் கண்டுபிடித்த “கொற்கை – வஞ்சி – தொண்டி வளாகத்தை” அறிவித்துவிட்டு, புற்றுநோயில் இருந்து மீளும் காலத்திலும் சிந்துவெளி ஆராய்ச்சியை தொடர்ந்ததாக. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தால் அழைக்கப்பட்டு, இவ்வளவு முக்கியமான பொறுப்பை அவர் ஏற்று வெற்றிகரமாக நடத்தினார் என்றால் எனக்கு வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது.
உடல் நலக்குறைவிற்கும் இடம் கொடுக்காமல், ஆய்வு, ஆட்சிப்பணி ஆகியவற்றில் தொடர்ந்துபாடுபட்டதை நினைக்கும் போது— அவரிடம் இருந்த மன உறுதி தமிழ் மாணவராக வளர்ந்ததின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. தமிழ் மட்டுமே படித்ததாலேயே இந்த மன உறுதி அவருக்கு கிடைத்திருக்கலாம். மேலும், அவர் மதுரைக்காரரும்கூட… அதை நான் சொல்லவேண்டுமா?
அவரைப் போன்ற அதிகாரிகள், அதிகாரிகளாக மட்டும் இல்லாமல், ஆராய்ச்சியாளர்களாகவும் நம்மிடையே இருப்பது நமக்கு கிடைத்த பெரும் பேறு.
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org