காந்திஜியின் அறிக்கை
தி இந்து ஆங்கில நாளிதழ்
நேரடிஅரசியல் (30.03.1937)
“மக்களுடைய பெரும்பான்மை ஆதரவை பெற்ற ஒரு பலம் பொருந்திய கட்சியானது ,கவர்னர்கள் விரும்பும் போதெல்லாம் குறுக்கிடுவதற்கு இடமளிக்கக்கூடிய ஆபத்தான நிலைமைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள முடியாது”
நேரடியாக அரசியலில் ஈடுபடுவதில்லையென்று தமக்குத் தாமே முடிவு செய்து வைத்திருந்த காந்திஜி, கடைசியில் நேரடி அரசியலில் ஈடுபட நேர்ந்தது; அதுவும் சென்னையில்தான் நிகழ்ந்தது. நிருவாகத்தில் கவர்னர்கள் குறுக்கிடக் கூடாது என்பது குறித்து நீண்ட வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆகையால் அவர் பேசாமல் இருக்க முடியவில்லை. அவருடைய கருத்து என்னவெனக் கேட்டு இலண்டனிலிருந்தும் – மூன்று தந்திகள் வந்து விட்டன. ஆகையால் இனிமேலும் காலதாமதம் செய்வது சரியல்ல எனக் கருதி அவர் தம் கருத்தை வெளியிட்டார். சென்னையிலிருந்து அவர் புறப்பட்ட நாளாகிய மார்ச் 30ஆம் தேதியன்றுதான் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார்.
அறிக்கையில் அவர் கூறியிருந்ததாவது: “பதவி ஏற்பதில் நம்பிக்கை தெரிவித்துக் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தின் நோக்கம், காங்கிரசின் அஹிம்சாக் கோட்பாட்டிற்கு ஏற்ப, மக்களுக்கு அதிகாரத்தை மாற்றக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்து வதற்கு இடையில், பதவி ஏற்றுக் காங்கிரசைப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான். ஏனெனில், மக்கள் கருத்தைப் பிரதானமாகப் பிரதிபலிப்பது காங்கிரசே. அமைச்சர்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுப் பணியாற்றும் வரை, கவர்னர்கள் அவர்களுடைய தனி அதிகாரங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு கௌரவமான உடன்பாடு கவர்னர்களுக்கும் காங்கிரஸ் அமைச்சர்களுக்குமிடையே ஏற்படாவிட்டால் மேற்கண்ட குறிக்கோளை நிறைவேற்ற முடியாது என்று நான் கருதினேன், இவ்வாறு ஓர் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளாமல்விட்டு விட்டால் பதவி ஏற்றவுடனேயே ஒரு முட்டுக் கட்டை ஏற்படுவதற்கு அது வழிகோலும்.
ஆகையால், இந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது தான் நாணயமானது என்று நான் உணர்ந்தேன், இருபாலாருக்கும் பொதுநன்மை பயக்கக் கூடியவாறு, கவர்னர்கள், தங்கள் உசிதம்போல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் படைத்திருக்கிறார்கள்.
“அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் அமைச்சர்களுக்கு எதிராக நாங்கள் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டோம்” என்று அவர்கள் அறிவிப்பதில் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டு எதுவுமே இல்லை .
மக்களுடைய பெரும்பான்மை ஆதரவை பெற்ற ஒரு பலம் பொருந்திய கட்சியானது கவர்னர்கள் விரும்பும் போதெல்லாம் குறுக்கிடுவதற்கு இடமளிக்கக்கூடிய ஆபத்தான நிலைமைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள முடியாது”
பக்கம் 772
தமிழ்நாட்டில் காந்தி
நூற்றாண்டு நினைவுப் பதிப்பு
சந்தியா பதிப்பகம்