- This event has passed.
சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்!
March 5, 2023 @ 8:00 am - 5:00 pm
சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்!
சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் 31 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சீர்காழி எல்.எம்.சி.மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பேரவை, திருக்குறள் கூறும் அறநெறி கருத்துக்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்தும் மேடைப்பேச்சுப் பயிற்சிகள் என அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வாகவும் ஆண்டு விழா நிகழ்வாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருக்குறள் பாடல், திருக்குறள் நடனம், திருக்குறள் பேச்சு என அனைத்தும் தனித்துவமாக இருந்தன. நிகழ்ச்சி துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நில்லுங்கள் என்று சம்பிரதாயமாக இல்லாமல் அனைவரும் தாங்களாகவே ஒருமித்து எழுந்து நின்று பாடியது மிகவும் வியப்பைத் தந்தது. அதை தொடர்ந்து பேசிய ஆசிரியர் ஒருவர், ‘மொழிப்பற்று என்பது வெளியிலிருந்து திணிக்கப்படுவது அல்ல; அது உள்ளிருந்து வர வேண்டிய ஒரு உள்ளார்ந்த உணர்வு! அதுதான் இங்கு நிகழ்ந்தது’ என்று அதை சுட்டிக்காட்டி பேசினார்.
விழாவில் மறைந்த நல்லாசிரியரும் சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் ஆலோசகருமான திரு கு. ராஜாராமன், தலைமை ஆசிரியர் அவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
சுமார் 450 மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் ஆர்வத்துடன் மாணவர்களை பங்கு பெறச் செய்துள்ளது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது.
சில நிகழ்வுகளில் மேடைகளில் மட்டுமே சில சான்றோர்கள் காணக்கிடைப்பது வழக்கம். ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும்
திருக்குறளைப் பார்த்து,
திருக்குறளைப் படித்து,
திருக்குறளை உள்வாங்கி,
திருக்குறளாகவே வெளிப்பட்டனர்!
இம்கத்தான நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
ஜெய்ஹிந்த்.
– கிள்ளிவளவன், 05.03.2023