எல்லீஸ் (1777 – 1819)
பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis) என்ற தன் பெயரைத் தமிழ் ஒலிக்கேற்ப எல்லீசன் என மாற்றிக் கொண்டார். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை செயலர், மசூலிப்பட்டண மாவட்ட நீதிபதி, நிலத்தீர்வை ஆட்சியர், சென்னை ஆட்சியர் (1810 – 1819) எனப் பல உயர் பதவிகளை வகித்தவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்தவர்.
திருக்குறள் மேல் கொண்ட விருப்பத்தால் திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு தங்க நாணயங்களை வடித்த பெருமைக்குரியவர். சென்னை அண்ணாசாலைக்கு இடப்பக்கமாக அமைந்த சாலைக்கு இவர் பெயரான ‘எல்லீஸ் சாலை’ என பெயர் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டு மொழிகளை ஆங்கிலேயர்க்குப் பயிற்றுவிப்பதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் எல்லீஸ் அவர்களால் ‘சென்னை கல்விச் சங்கம்’ 1812 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சங்கம் உருவாக்கிய கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர் முத்துசாமிப் பிள்ளை ஆவார். இவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களைத் தொகுத்ததும் அவரது வரலாற்றை எழுதுவித்ததும் எல்லீஸ் அவர்களே. அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து (1812 – 1814) வெளியிட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்தோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ்மொழி தோன்றவில்லை, தமிழ் தனித்த மொழி என முதலில் கூறியவர் இவரே. இவருக்குப் பின்னரே இராபர்ட் கால்டுவெல் (1856) இக்கருத்துக்களை வலியுறுத்தி மெய்ப்பித்தார். 1819இல் தன்னுடைய 41ஆவது வயதில் இராமநாதபுரத்தில் மருந்து என்று தவறாக நஞ்சினை அருந்தி மறைந்தார். தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு வரலாற்றிலும் பதிப்பு வரலாற்றிலும் இவர் பங்கு குறிப்பிடத்தக்கது.