திருமதி . கொ.ப. செல்லம்மாள், கோட்டூர், சென்னை
பத்தாண்டுகளுக்கு முன் ‘தினத்தந்தியில்’ “ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி திருக்குறள் பரப்பும் செல்லம்மாள்” என்ற கட்டுரையைப் படித்தேன். அடுத்த ஓரிரு மாதத்திலேயே அவருடைய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து நானும் என் மனைவியும் தானியில் அவரது வீட்டில் போய் இறங்கினோம். நான் என்னைப் பற்றியும் அவரது திருக்குறள் பணியை அறிந்து பாராட்ட வந்ததை கூறியபோது அவரது கண்கள் வியப்பால் மலர்ந்தன. அவரும் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவராயினும் ஒரு இளமங்கையைப் போல துள்ளிக்குதித்து மகிழ்ந்தார். ஒரு கல்வி அதிகாரி இப்படி நேரில் வந்து பாராட்டுவது என்னால் நம்பமுடியவில்லை என்றார்.
அறிவுலகம், தமிழுலகம் அப்படித் தான் ஆகிவிட்டது. வாழ்த்துவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் கூட கூலி கேட்பார்கள் போல் உள்ளது. அம்மையார் கொ.ப. செல்லம்மாள் மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் நல்ல கொள்கையும், சிந்தனையும் உள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டுள்ளார். சிறுவயது முதலே இசை நாட்டியம் எனப் பல துறையிலும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் படித்து ஆசிரியரானதும் அது தொடர்ந்து கொண்டே இருந்ததால் தமிழ் பாடங்களையும், குறிப்பாக திருக்குறளையும் இசையுடன் பாடி நடத்தும் வழக்கமுடையவர். ஆனால், இருபத்தைந்தாண்டுகளாக பேராசிரியர் கு மோகனராசு நடத்தும் உலகத் திருக்குறள் மையத்திலும் பணியாற்றி, “திருக்குறள் தூதர்” எனும் பெருமையைப் பெற்றவர். தானே திருக்குறள் இசைக்கலை மன்றம் ஒன்றைத் தொடங்கி நடத்துவதுடன் தன் வீட்டின் முகப்பிலேயே திருவள்ளுவர் சிலையை நிறுவி சான்றோர்களை அழைத்துப் பாராட்டியவர். மாநாடுகள், கருத்தரங்குகளில் திருக்குறள் ஆய்வுரைகளை நிகழ்த்தியவர்.
தன்னுடைய மகன், மகள் திருமணங்களில் கூட திருக்குறள் இசைப்பாடல்களுடன் நடனமாடியவர்.
எல்லா வகையிலும் திருக்குறளே வாழ்வு திருக்குறளே உயிர்மூச்சு என்று வாழும் செல்லம்மாள்
திருக்குறள் தொண்டர் தான்.