திரு. இராம. சந்திரசேகரன்,தஞ்சை
ஒரு தங்கமாளிகை முதலாளி தஞ்சையில் திருக்குறள் தொண்டராக அறிமுகமாகிறார் என்பதில் மகிழ்ச்சி தானே. திருக்குறள் தொண்டர் என்பதற்கு மேலாக ஒரு மனிதநேய பற்றாளர் என்றே சொல்லவேண்டும்.
நகைகளை சரிபார்த்துக் கொண்டே, “ஏம்மா! இன்னும் கூட குறைத்துக்கேட்டிருக்கலாமே விலையை” என்று சொல்லிக்கொண்டே எங்களைப் போன்ற திருக்குறள் தமிழ் ஆர்வலர்களிடமும் பேச்சு கொடுக்கும் அந்த நம்பிக்கை திறமை அவருக்கு எல்லோரிடத்திலும் உண்டு. எப்போதும் உண்டு . அதே வேளையில் இனிய சொல்லில் கண்டிப்பும் கலந்து அவர் வணிகத்தில் ஈடுபடுவது ஒருவேளை குறளால் வந்த பண்பாக இருக்கலாம்.
இது போல இன்னும் பத்து பேர் தஞ்சையில் இருந்தால் திருக்குறள் அன்பர்களுக்கு எல்லாம் குளிர் நிழல் கிடைத்ததாக இருக்கும். நான் அறிமுகம் செய்து அனுப்புகின்ற எல்லோரிடமும் அவர் சொல்வது முதலில் தண்ணீர் குடியுங்கள் என்பார். அடுத்து தேநீர் குடியுங்கள் என்பார். அடுத்து என் சார்பாக உணவு சாப்பிட்டுவிட்டுத் தான் போகவேண்டும் என்பார். இப்படி எத்தனை பேரை அனுப்பினாலும் அவர்கள் சொல்வது இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா?
எல்லாவற்றிற்கும் மேலாக தன் துணைவியார் மறைந்து 5 ஆண்டுகள் ஆன பின்பும் இப்போதும் அவர் நினைவாக ஏதேனும் கொடைகளை அளித்துக் கொண்டே இருக்கிறார். அதற்காகத் தனியாகவும் ஒரு நாள் அழைத்து தமிழ் அறிஞர்களும், திருக்குறள் தொண்டர்களையும், சாதனையாளர்களையும் பாராட்டி விழா எடுக்கிறார். ஏறத்தாழ இதற்காக மட்டும் அவர் 5 லட்சம்ரூபாய் வரை செலவு செய்கிறார். எந்த நிகழ்விலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதை விரும்பாதவர். இத்தகைய கொடைவள்ளல், சிறந்த தமிழ் அறிஞரும் கூட. எந்த நூலையோ கட்டு ரை கொடுத்தாலும் அதில் உள்ள பிழைகளைச் சரியாகக் குறிப்பிட்டுக் காட்டுவர்.
எல்லா வகையிலும் முதன்மையான இத்தொண்டரை நான் தஞ்சையில் பணியாற்றியபோது தொடர்பு இல்லாமல் இருந்தேனே என்று வருந்துகிறேன். அவரது பணிகளை விரிக்கின் பெருகும்.
இராம. சந்திரசேகரரின் திருக்குறள் தொண்டு வளர்க! வாழ்க அவர் புகழ்!