திரு. பாஸ்கரன், சென்னை.
தன் மகன் “கருணாகரன்” 27 வயதில் இறந்த சோகத்தில் மூழ்கியிருந்த பாசுகரனாருக்கு இவ்விழப்பை எப்படி ஈடு செய்வது என்ற எண்ணம் மேலோங்கியது. ‘கருணாகரன்’ பெயர் உலகில் நிலைத்து நிற்கவேண்டுமென்று நினைக்கிறார். ஏற்கனவே, தான் பற்றுக்கொண்டிருந்த திருக்குறள்தான் அவரைத் தேற்றியது. தன்னிடமிருந்த திருக்குறள் நூல்களோடு மேலும் பல ஆயிரம் திருக்குறள் நூல்களை வாங்கி கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகமாக்கி ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும்படி நிறுவி விட்டார்.
இப்போது அவர் தெளிவாகவும் திடமாகவும் அண்ணா நகரில் அந்நூலகத்தோடு இரண்டறக்கலந்து மற்ற உறவுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு நூலகத்திலேயே குடியேறிவிட்டார். இப்படியொரு திருக்குறள் தொண்டரைப் பார்க்க முடியுமா? அதனால் தான், தமிழ்நாடு அரசு அவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
ஆனால், அவர் திருவள்ளுவருக்கு தற்போது சமூகம் கொடுத்துள்ள உருவ அடையாளத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். அவருடைய எதிர்ப்பு அளவு மீறியதாகவே திருக்குறள் அறிஞர்கள் கருதி அவரை ஒதுக்கியுள்ளார்கள் என்றே கருதுகிறேன். ஏனென்றால், இப்போதுள்ள திருவள்ளுவர் உருவமென்பது வரலாற்றுக் கண்டுபிடிப்பல்ல
. ஆயினும், பல தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி கே. ஆர். வேணு கோபாலசர்மாவின் திருவள்ளுவர் உருவத்தை ஏற்றுக்கொண்டனர். நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றை, இது தவறு என்று ஒருவர் மட்டும் மறுப்பது சரியல்ல. ஏறத்தாழ தமிழ்ப்பண்பாடு ஒழுக்கம் ஆகியவற்றின் அடையாளமாகவே அனைவரும் போற்றும் திருவள்ளுவரின் தோற்றத்தை மறுப்பதன் மூலம் ஒன்றும் ஆகப்போவதில்லை.
திருக்குறள் நூலகம் ஒன்றை மிகப்பெரிய அளவில் உருவாக்கி பராமரிக்கும் பாஸ்கரனாரை திருக்குறள் தொண்டர் என்று போற்றுவதில் பெருமை கொள்வோம்.