திரு. இ. ஆறுமுகம், அம்பத்தூர், சென்னை.
தான் கட்டி வழிப்படும் அம்மன் கோவிலிலேயே திருவள்ளுவருக்கும், ஒளவையாருக்கும் சிலை அமைத்து வழிப்பட்டு வருகிறார் ஆறுமுகம். இதனை நான் சிறப்பாகக் கருதுகிறேன். நான் தேனி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்தபோது மகிழுந்தில் திண்டுக்கல் வட்டம் தாமரைப்பாக்கம் என்ற ஊரில் பிள்ளையார் கோவிலில் “அகர முதல எழுத்தெல்லாம்” எனப் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். உடனே வண்டியை நிறுத்தி அதை எழுத ஏற்பாடு செய்தவரைச் சந்தித்து விவாதித்தேன். அவர் என்னை நிறுத்தியதே இந்த குறள் தானே! இதற்காகவே எழுதினோம் என்றார்.
எந்த இடத்திலும், எந்த சூழலிலும் திருக்குறள் முதன்மைப்படுத்தவேண்டும் என்ற எனது கனவுக்கு ஒரு வடிவமாக இதைப் பார்த்தேன்.
அதேபோல, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஒரு அம்மன் கோவிலிலும் 1330 குறளும் அரங்கமாகவே வைத்து வழிப்படுகிறார்கள் என்ற செய்தியும் இவ்விடத்தில் நினைவுக்கு வந்தது. எனவேதான், நண்பர் தான் வணங்கும் அம்மன் கோவிலில் திருவள்ளுவருக்கும் வழிபாடு நடத்துவதால் என்னுடைய தொடர்புவட்டதில் முதன்மையான இடத்திலுள்ளார். இவரும் மோகன்தாசுவைப் போல ஞானமன்றத்தின் ஐந்து மாநாடுகளிலும் கலந்துக்கொண்டு பொருளுதவியும் செய்தார்.
நான் எழுதி வெளியிட்ட “திருக்குறள் மக்கள் இயக்கமாக ஏன் மாற வேண்டும்” என்ற நூல் வெளியீட்டிற்கும் பொருளுதவி செய்தார். அண்மையில் குறள் மலைச் சங்கத் தலைவரின் உடல்நிலைப் பாதிக்கப்பட்டபோது அவருக்கு உதவுங்கள் என்றேன். நான் எதிர்ப்பார்த்ததைவிட இருமடங்கு கொடுத்து உதவினார்.
இவையெல்லாம் இவரது மனிதநேய அன்பு, ஈகைக்குணம், அனைத்தையுமே குறிக்கிறது. அதனால் தான் திருவள்ளுவர் அற நெறிகளோடு தானும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுகின்றவரை திருக்குறள் தொண்டர் என்று குறிப்பிட்டு அவருக்கு வரலாற்று ஆவணத்தை உருவாக்குகிறேன்.
இவருடைய தம்பி நெல்லைப் பகுதியில் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கும் ‘சங்கரலிங்கமே’ என்பது இவருக்கு கூடுதல் சிறப்பு. இவரது குடும்பம் சிறந்த திருக்குறள் குடும்பமாக விளங்குவதுபோல நாமும் நம் குடும்பத்தினரையும் திருவள்ளுவரை நோக்கி திருப்புவோம்.