அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஜப்பானியரான அவர், ஆங்கிலத்தில் விளக்க உரையுடன் கூடிய ‘த குறள்: திருவள்ளுவர்ஸ் திருக்குறள்’ எனும் நூலை இவ்வாண்டு ஜனவரியில் வெளியிட்டார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நான்கு நேரடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ஔவையார், திருவள்ளுவர் ஆகியோர் குறித்தும் அவர் கலந்துரையாடினார்.
ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளுடன் இருபது ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது தமிழ்மொழியையும் அவர் கற்றுக்கொண்டார்.
பேச்சுத் தமிழோடு எழுத்துத் தமிழையும் பயின்ற தாமஸ், தமிழ் இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டினார். அவரது தமிழ்மொழி கற்றல் பயணத்தில் உறுதுணையாக இருந்தார் மதுரையைச் சேர்ந்த முனைவர் கு. வே ராமகோடி.
திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் திருக்குறளைப் போன்ற ஒரு கவிதானுபவத்தைத் தரவில்லை என்ற குறையை உணர்ந்ததாகக் கூறும் தாமஸ், ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டதாகக் கூறினார்.
“திருக்குறளில் என்னை மிக வும் ஈர்த்தது, திருவள்ளுவரின் வார்த்தை விளையாட்டுதான். அவரது கவிநயமும் சொல் தெரிவுகளும் சந்த நயமும் வியக்கத்தக்கவை. அதே சுவையை இன்றைய நவீன ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்துள்ளேன்,” என்றார் அவர்.
மண்ணைப் போற்றுதல், விருந்தோம்புதல் போன்ற தமிழர் பண்பாட்டுக்கூறுகளைப் புரிந்துகொள்ள தாமசுக்கு திருக்குறள் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தத்துவ அடிப்படையில் திருக்குறளை ஆராய்ந்த அவருக்கு, அதன் கருத்துச் செறிவு வியப்பூட்டியது. மணக்குடவர், பரிமேலழகர் ஆகியோரின் உரைகள் அவரது புரிதலுக்குக் கைகொடுத்தன.
“விருந்தோம்பல் அதிகாரம் என் மனத்துக்கு நெருக்கமானது. விருந்தினர்களை நடத்தும் முறையை மட்டுமன்றி, அவர்களிடம் பேசுவது எப்படி என்பதையெல்லாம் இந்த அதிகாரம் எடுத்துரைக்கிறது,” என்றார் தாமஸ்.
நீதிநூலான திருக்குறளை அணுகுவதற்குப் பலர் தயங்கக்கூடும் என்று கூறிய அவர், திருக்குறளின் கருத்துகள் அனைத்தும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.
“நாம் எவ்வாறு திருக்குறளின் கருத்துகளை வாழ்வியலுக்கு பொருத்திப் பார்க்கிறோம் என்பதே முக்கியம்,” என்ற தாமஸ், ஔவையார் பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
ஆண்டாளின் திருப்பாவை நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அடுத்த ஆண்டு இவர் வெளியிட உள்ளார்.
https://www.tamilmurasu.com.sg/special-feature/story20221127-100442.html