அமரர். மெ. இரத்தினம்,சேலம்
நெடுஞ்செழியன், கண்ணகி, திருவேங்கடம், மாதவி, தமிழரசன் இத்தனை பெயர்களை தன் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ்ந்தவர் சேலம் அம்மாப் பேட்டை மெ. இரத்தினம். அவர் இன்று (01.07.2017) மறைந்துவிட்டார். இவரைக் குறித்து மற்றொரு திருக்குறள் தொண்டரான திருவள்ளூர் பச்சையப்பனாரைப் பற்றி எழுதும் போது குறிப்பிட்டியிருந்தேன். 82 வயதில் இவர் மறைந்தாலும் 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டின், தமிழ் இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டின் மீது அக்கறை கொண்டு வாழ்ந்தவர்.
தமிழக எல்லைப் போராட்டங்களில் சிலம்புச் செல்வர் ம. பொ. சியின் சீடராக இருந்து பல முறை சிறை சென்றவர். என்னுடைய இளமைக் காலங்களில் (20 வயது முதல் 30 வயது வரை) எல்லா நேரங்களிலும் எல்லா சமூக உயர்வுத்தாழ்வுகளை விமர்சிப்பவர். எனக்குச் சொந்தம் இல்லாவிடினும் என் நண்பர் புலவர் அங்கமுத்துவின் சிற்றப்பா என்பதால் அவர் அழைப்பது போலவே (அப்பையன்) என்றே நானும் அழைத்து உறவினரானேன்.
அவரை இத்தொகையில் கூற வேண்டிய தேவை ஏன் வந்தது என்றால் இருபது ஆண்டு இடைவெளியில் மீண்டும் நான் சேலத்திற்கு திருக்குறள் பரப்புரைக்குச் செல்லும் போது எந்தப் புலவர்களும் ஆதரிக்க முன் வராதபோதும் இவர் என்னோடு விவாதித்தும் வழி நடத்தியும் பழைய அதே அன்பைப் பொழிந்தும் ஏறத்தாழ திருவள்ளுவர் ஞானமன்ற சேலம் மாவட்ட அமைப்பாளர் என்று கூறும் அளவிற்கு பலரையும் அறிமுகப்படுத்தினார்.
ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் பணியாற்றும் நண்பர் அறிமுகப்படுத்தி அவர் வாயிலாகத்தான் எனக்கு இயக்குநர் சேகர் அறிமுகமானார். அதுமட்டுமல்ல தான் தொடர்பு வைத்திருந்த எல்லா நிறுவனங்களிடத்திலும் நண்பர்கள் இடத்திலும் எனது பணிகளை எடுத்துச் சொல்லி அவர்கள் வெளியிடும் அறிவிப்புகள், நாட்காட்டிகள் ஆகியவற்றில் இணைப்பு ஏற்படுத்த முயன்றார். சிலர் ஓடி ஆடித் திரிந்து பணிபுரிவார்கள். சிலர் இருந்த இடத்திலேயே இருந்து வழிக்கட்டுவார்கள். அப்படி வழிக்காட்டிய அமரர். இரத்தினமும் திருக்குறள் தொண்டர் தான்.