Skip to content

அமரர். ஆ. வே. இராமசாமி,துறையூர்

அமரர். ஆ. வே. இராமசாமி, துறையூர்

இரவில் சுவர் ஏறிக் குதித்து தொலைதூரம் பயணம் செய்து திருக்குறள் பரப்புரை செய்ய யார் முன் வருவார்? 100% காது கேளாத அமரர் ஆ. வே. இராமசாமி தான் இப்படி செய்தார் என்று அறிந்த போது திருக்குறள் எப்படியெல்லாம் மனிதரை கவர்கிறது என்று வியந்தேன்.

முப்பது 30 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றிய போதும் ஓய்வுக்குப் பின்னும் 30 ஆண்டுகள் திருக்குறள் ஒன்றையே நேசித்து சுவாசித்து வாழ்ந்தவர் ஆ. வே. இராமசாமி எனப்படும் திருக்குறள் தொண்டர். துறையூரை அடுத்துள்ள வைரி செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இவர் வீட்டில் தெலுங்கு பேசுபவராயினும் தமிழும் திருக்குறளும் இரண்டுக்கண்களாகப் போற்றி வாழ்ந்தவர். எங்கிருந்து இவருக்கு அழைப்பு வந்தாலும் உடனடியாக தன் வருகையை உறுதி செய்து மடல் எழுதிவிடுவார். மற்றவர்களும் தனக்கு எவ்வித உதவி செய்யாவிடினும் ஓர் அஞ்சல் அட்டை கூட அனுப்ப மற்றவர்களுக்கு மனம் வரவில்லையே என்று ஆதங்கப்படுவார்.

ஓர் அஞ்சல் அட்டை என்பது எழுதுவோருக்கும் எழுதப்படுவோருக்கும் மட்டும் பாலமாகப் பயன்படுவதில்லை, இரண்டுக் குடும்ப உறுப்பினர்களும், அஞ்சல் அட்டை விநியோகிக்கும் அஞ்சல்காரரும் அறிந்துக்கொள்ள எத்தனையோ செய்திகள் அதில் இருக்கும் அதை கடமையாகச் செய்து கடைசி வரை திருக்குறள் பரப்புரையை செய்தவர்.

துணிச்சலாக ஆட்சியாளர்களின் தமிழ் விரோத செயல்களைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்தவர். அவர் காலடி படாத ஊர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு திருக்குறள் பரப்புரைகளைச் செய்தார். நமது ஞானமன்றத்தில் கலந்து கொண்டதுதான் அவர் தனியாகப் பயணம் செய்த கடைசி நிகழ்ச்சியாகும்.

ஆ. வே. இராமசாமி அவர்களுக்கு, வடக்கு மண்டல மாநாட்டில் திருக்குறள்  ந.வை. சிவம் அவர்கள் படம் திறந்து வைக்க , அனைவரும்  அஞ்சலி செலுத்தினோம்.

அமரர் ஆசிரியர்  திருக்குறள் ஆ. வே. இராமசாமி புகழ் ஓங்குக!

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்