Skip to content

கவனகர் திரு. இரா. எல்லப்பன்,செங்கல்பட்டு

திரு. இரா. எல்லப்பன், செங்கல்பட்டு,காஞ்சிபுரம்

எல்லைகளைக் கடந்து எல்லோரிடமும் பழகி திருக்குறள் பரப்புரை செய்து வந்தவர்  கவனகர், கலைஞர் எல்லப்பனை இத்தொகை நூலில் சேர்த்து எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கல்லூரி பல்கலைக்கழகங்களில் படிக்காமலேயே திருக்குறள் கருத்துகளில் தெளிவு பெறவும் முடியும் ;மனம் இருந்தால் பரப்புரைகளிலும், தொடர் பயணங்களிலும் செய்ய முடியும் என்பதற்கு எல்லப்பன் ஒரு சான்று 46 வயதிற்கு மேல் திருக்குறளைக் கற்று 1330 குறள்களையும் பொருளோடு புரிந்து மனனம் செய்து எந்தக் குறளைக் கேட்டாலும் கணினியைப் போல உடனே பதில் சொல்லும் ஆற்றலைப் பெற்றவர்.

தான் பெற்ற திருக்குறள் பயிற்சியை மாணவர்களுக்கும் எளிதாகத் தந்து மொத்தத்தில் எவராக இருந்தாலும் 1330 குறள்களையும் மனனம் செய்விக்க முடியும் என்று அறைகூவல் விடுகிறார். இவரிடம் பயின்று இதுவரை 100 மாணவர்கள் 1330 குறளையும் ஒப்பித்து தமிழ்நாடு அரசின் பரிசுத் தொகை ரூ.10,000/- பெற வைத்துள்ளார். இவர் 15 விதமான கவனக நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் வியக்க வைத்துள்ளார்.

நான் தேனியில் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்தபோது பல பள்ளிகளில் அவரது நிகழ்ச்சிகளை நடத்தச் செய்து சிறப்பு செய்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக தற்போது ஞானமன்ற மாநாடுகளிலும், பல்வேறு திருக்குறள் நிகழ்வுகளிலும் அவருக்கென்று தனி நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துவதென்பது அனைவராலும் பாராட்டப்படுவதாகவும், விரும்பப்படுவதாகவும் அமைந்துள்ளது.

எல்லப்பன் வாழ்வில் திருக்குறள் முழு நேரத் தொழிலாகவே,வாழ்க்கையின் அங்கமாகவே  மாறிவிட்டது என்பது மிகையல்ல. அத்துடன் திருக்குறள் நெறியில் வாழ்வதும் அதை பொது மக்கள் இடத்தில் கொண்டு செல்வதும் தான் கடமையாகவே செய்து வவந்தார் . அவரது திருக்குறள் தொண்டை வியந்து பல்வேறு அமைப்புகள் பாராட்டும், பரிசளிப்பும் செய்து வந்தன. அத்தகைய மமானிதருக்கு ஒரு குறை ,கவனக நிகழ்ச்சிகளுக்கு போதிய நேரம் யாரும் கொடுக்கவில்லை என்பதுதான் .

வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம் ,சர்வீஸ் டு  சொசைட்டி, மூன்றும் இணைந்து உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் என்ற இயக்கத்தை எல்லப்பன் உள்ளிட்ட 7 பேரை வைத்து தொடங்கியது . அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டனமில்லா திருக்குறள் முற்றோதல் பயிற்சி அளிக்கும் திட்டமிது . அதற்குள் காலன் அவரை அழைத்துக் கொண்டான்

அவர் 2022 இல் மாரடைப்பின் காரணமாக ,சின்னாட்கள் மருத்துவனையில் இருந்து காலமானார்.அவர் இறந்த பின் 2022 இல்தமிழக அரசால்  தமிழ்ச்  செம்மல் விருது அவருக்கு வழங்கப்பட்டது

அன்னார் புகழ் ஓங்குக!!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்