Skip to content

முனைவர் த . திருமூலநாதன்,IIT கான்பூர்

செல்வன். திருமூலநாதன், புள்ளம்பாடி, திருச்சி

திருக்குறள் திருத்தொண்டர் தயாபரன் இணையருக்கு செல்ல மகனாகப் பிறந்து தனது  3 வயது முதலே திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் அனைத்தையும்  கேட்டவுடன் திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தவர் திருமூலநாதன்.

தற்போது பெங்களூரில் பொறியியல் படித்து ,இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்று ,இந்திய  தொழில்நுட்ப பல்கலைக்  கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் .  தன் தந்தையும் தாயும் ஊக்கப்படுத்திய வழியில் வளர்ச்சி பெற்று திருக்குறள் கவனகராக இப்போதும் விளங்குகிறார்.

அருள் பெற்ற திருமூலநாதன் தன் திறத்தால் தான் மட்டும் பயன்பெறாது நாடு முழுவதும் உலகம் முழுவதும் சென்று திருக்குறள் பரப்புரையாற்றுவது எண்ணி எண்ணி மகிழத் தக்கது. தன் தந்தையார் புள்ளம்பாடி  தயாபரன் ஏற்படுத்திய திருமூலநாதன் அறக்கட்டளைப் பணிகளை தானும் முன் வந்து செய்து

மகன் தந்தைக் காற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான்  கொல்எனும் சொல்.

என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்துவருகிறார். பல்லாயிரம் பேர் கூடும் அவையிலும் திருக்குறள் மட்டுமல்லாமல் மற்ற இலக்கியங்களையும் வாழ்வியல் நுட்பங்களையும் திறம்பட எடுத்துரைக்கின்றார்.

சீர்காழி திருவள்ளுவர் பன்னாட்டுப்பேரவை செயலர் திரு. இராசாராமன் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தபோது அதுவும் சீர்காழியிலேயே அறிமுகம் ஆனபோது ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தரையே சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இவரும் தந்தையார் பிரானும் எதிர்காலத்தில் தமிழகம் தழுவிய திருக்குறள் மன்றங்களின் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுவார்களேயானால் திருக்குறளே தமிழகத்தின் ஏன் உலகத்தின் ஆட்சியை வழி நடத்துவதாக அமையும்.

இன்றைய காலகட்டம் சமூகத்தில் நிலவும் பல கேடுகளுக்கு திருக்குறளே சர்வசீராக நிகவாரணி என்பதைச் சொல்லவேண்டியவர்கள் சொல்லவேண்டும். திருக்குறள் தொண்டர்களாக மாற இவரும் தொண்டாற்ற வேண்டும். திருக்குறள் தொண்டர் வரிசையில் முதன்மையான இடத்தைப் பிடிக்கக்கூடிய திருமூலநாதனை வாழ்த்துவோம்!

குறள் அறம் பரப்பி குவலயம் போற்ற வாழ்க .. வளர்க !

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்