Skip to content

திரு.ஆ.பழனியாண்டி,திருச்சி

திரு. ஆ. பழனியாண்டி, திருச்சி

கல்லூரிக்காலங்களில் ஒன்றாகப் படித்தவர் தமிழாசிரியர்ப் பணியிலும் ஏறத்தாழ ஒரே காலத்தில் சேர்ந்து ஓய்வுப்பெற்றவர். அண்மையிலுள்ள அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரைச் சேர்ந்தவர். நண்பர் பழனியாண்டி போல , என்னோடு தருமை ஆதினத்தில் படித்த எங்கள் பகுதி நண்பர்கள் இருபது பேர் இருப்பர். அவர்களில் எவரும் எமது திருக்குறள் பணியை முழுமையாக ஏற்று துணைபுரியவோ, தொண்டற்றவோ முன் வராத நிலையில் திருவள்ளுவர் ஞானமன்றம் திருச்சி கிளை என்று தொடங்கி ஆண்டுதோறும் திருவள்ளுவர் விழா நடத்தி வருகிறார் பழனியாண்டி.

தான் குடியிருக்கும் திருச்சி க.க. நகரைத் தவிர வேறெங்கும் செல்லாதவர்.  நான் அழைத்தால் மட்டும் மற்ற ஊர்களுக்கும், கூட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வார். தனக்கென்று ஒரு அமைப்பாக யோகா பயிற்சி மையம் அமைத்துக் கொண்டு தானும் பயிற்சி செய்து மற்றவர்களுக்கும் பயிற்றுவித்து உடல் நலத்தைப் பேணும் தொண்டராக எப்போதும் காணப்படுவார். பலரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளதைப் படித்துவிட்டு தானும் ஓர் உரை நூல் எழுத முனைந்துள்ளார். அவரது ஊராகிய சிறுகளத்தூரில் நண்பர் முத்துக்குமரன் அமைத்து வரும் சிலைக்கும் நிதி உதவி அளித்துள்ளார்.

திருக்குறள் தொடர்பாக கருத்துக்களை அவர் வெளிப்படுத்தும்போது கட்டளையிடுவது போன்றே அவரது தோரணை இருக்கும். இதுவே அவருக்கு பலமாகவும், பலவீனமாகவும் அமைந்துவிடும். இந்தத் தமிழ்ச்சமூகம் இப்படி சீரழிந்து போய்விட்டதே; ஈழத்தில் இத்தனைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்களே என அவர் ஆவேசப்படும்போது இத்தகைய உணர்வுள்ள தமிழாசிரியர்கள் நமக்கு நூறு பேர் கிடைக்கமாட்டார்களா என எண்ணி ஏங்குவேன். இத்தனைக்கு பின்னாலும் அவரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் இருந்து கொண்டே உள்ளது.

இன்னும் சிறிது கீழிறங்கி உழைக்கவேண்டும், இன்னும் மேல் வந்து உதவவேண்டும், இன்னும் சிறிது நேரம் கூடுதலாகத் திருக்குறளுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று விண்ணப்பித்து வருகிறேன். “சும்மா இருப்பவனுக்கு கூலியைக்கொடு, வேலை செய்பவனுக்கு வேலைக் கொடு” என்பதுபோல் தான் இது தோன்றும். ஆனால், இறைக்கிற கிணறு தானே ஊறும். இன்னும் வேக மிக்க திருக்குறள் தொண்டராக நண்பர்  இப்பணிக்கு வரவேண்டுமென்பதே எனது அவா!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்