அமரர் திரு. பழனிச்சாமி, திருச்சி
திருச்சி மாவட்டம் வையம்பட்டிக்கு அருகிலுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி இளமையிலேயே வறுமையாலும், தெளிவான தமிழ் பற்றாலும் புடம் போடப்பட்டு திருச்சிக்கு வந்தவர். அங்குள்ள பாரத் மிகுமின் தொழிலக இணைப்பாக இருந்த தனியார் பள்ளியில் இடைநிலை ஊழியராக ,தோட்டக்காப்பாளராகப் பணியாற்றிக் கொண்டே இப்பள்ளியின் 5000 மாணவர்களையும், 200 ஆசிரியர்களையும் பெற்றோரையும் திருக்குறள் என்னும் வலையால் இணைத்தவர்.
தொடக்கத்தில் இவரது பேச்சையும், திருக்குறள் கருத்தையும் ஏளனமாகப் பார்த்தவர்கள் அனைவரும் ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முழுமையாக அவரைப் புரிந்துக் கொண்டு அவருக்கு உதவி செய்ய, திருக்குறள் பரப்புரை மையம் அமைக்க ஆதரவு கொடுக்கவும் முன் வந்தனர். துவாக்குடி பகுதியில் 3 சென்ட் மனையை நகராட்சி அனுமதியுடன் வாங்கி நண்பர்களின் உதவியோடு ஒலிப்பெருக்கி வாயிலாக தினமும் திருக்குறள் பரப்பும் மையம் ஒன்றைக் கட்டி தொண்டு செய்யத் தொடங்கினார். ஆனால், இடையில் சில சாதி வெறியர்களின் அத்துமீறல்களால் செத்துப்பிழைத்தார் என்றே சொல்லவேண்டும்.
திருக்குறளால் மக்களை ஒருங்கிணைக்க முயன்ற இவருக்குரிய முழு மரியாதையையும் சமூகம் கொடுக்கவில்லை என்றே உணர்கிறேன். ஏனென்றால், 25 ஆண்டுகள், ஏழாயிரம் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி நடத்தி பரிசளிப்பும் பாராட்டும் கொடுத்த இவர் படுக்கையில் விழுந்த பின்பு எட்டிப்பார்க்கவும் ஆளில்லை. அவர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு பாராட்டு விழா நடத்தி பணமுடிப்பு தர முயன்றேன். ஆனால், இயலவில்லை. அவர் மறைந்த பிறகு தற்போது என்னால் இயன்றது அவருடைய திருவுருவப்படத்தை ஞானமன்றத்தில் திறந்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியதில் மனம் நிறைவடைந்தேன்!
திருக்குறளுக்காக அடிப்பட்ட ஒரே தொண்டர் அவர் தான் என்று வரலாற்றில் பதிவு செய்கிறேன்.