திரு. கருபேச்சிமுத்து, திருச்சி
‘வள்ளல்கள்’ வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் கருபேச்சிமுத்து. திருச்சி பாரத் மிகுமின் தொழிற்சாலையில் பொறியாளராகப் பணியாற்றி தனது திட்டமிட்ட உழைப்பாலும், இல்லறத் துணைவியின் இனிமையான நட்பாலும், சமூகத்தின் மிக உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளவர்.
“திரு வேறு; திருத்தொண்டர் ஆதல் வேறு” என்று “திரு வேறு; தெள்ளியர் ஆதலே வேறு” என்ற திருக்குறளையே புரட்டிப்போட்டுள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக “ஈத்து உவக்கும்” பண்பைப் பெற்றுள்ளார். தன்னுடைய சேமிப்பின் வாயிலாகத் தனது பிள்ளைகளுக்கு வேலை வாங்கித் தருவதற்குப் பதிலாக பல நூறு பேருக்கு வேலை கொடுக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார.
அதே நேரம் தான் தந்தைக் கருப்பையாவின் நினைவாக கரூர் கல்வி அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவி திருக்குறளோடு ஒளவையின் ஆத்திச்சூடி உட்பட்ட நூல்களையும் இணைத்து ‘ஏழிளந்தமிழ்’ என்ற நூலை அச்சடித்து பல லட்சக் கணக்கில் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் இவரை எனக்குத் தெரியுமென்றாலும் தேவக்கோட்டையைச் சேர்ந்த இவர் எங்கள் ஊர்க்காரராகவும் உறவுக்காரராகவும் மாறிவிட்டார். தேவக்கோட்டைத் திருக்குறள் ஒருங்கிணைப்பு நான்காவது மாநாட்டில் இரண்டு நாளும் கலந்துக்கொண்டவர், அடுத்து பெண்ணாகடத்தில் நடந்த திருமுதுகுன்ற குறள் மாவட்ட மாநாட்டில் ஆளுயர வள்ளுவர் சிலையை ஒரு இலட்சம் வரையில் செலவு செய்து ஊர்வலத்தில் கொண்டுவந்தது, அவரது பற்றை மேலும் தெரியபடுத்தியது.
அதுமட்டுமல்லாமல் தனது திருவள்ளுவருக்கு தங்கக்கோவில் கட்ட செலவிடவும் பணிமேற்கொண்டுள்ளார்.
இவர் திருக்குறள் தொண்டர் மட்டுமல்ல, திருக்குறள் தொண்டருக்கெல்லாம் புகலிடம் தரும் திருக்குறள் வள்ளல் என்பது சரிதானே!