Skip to content

திரு.தென்னிலை கோவிந்தன்,கரூர்

திரு. தென்னிலை கோவிந்தன், கரூர் மாவட்டம்

வழக்கறிஞராகப் படித்த இவர் வாழ்க்கைக்காக எடுத்துக் கொண்டது கருப்புட்டி வாணிகம். ஆனால், நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்து கொண்டிருப்பதோ திருக்குறள் பரப்புரை. கரூர்ப் பகுதி மட்டுமில்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதியிலுள்ள திருக்குறள் அமைப்புகளுக்கெல்லாம் தெரிந்த பெயர் தென்னிலை கோவிந்தன். திருக்குறளை சிறுவயதிலேயே (1330) மனனம் செய்தவர். கவனகர் என்றும் சொல்லும் அளவிற்குத் தேர்ச்சிப் பெற்றவர். தான் மட்டுமல்லாது இல்லத்தாரையும் திருக்குறள் நெறியில் வாழ வைத்து வீட்டில் நடக்கும் அனைத்து மங்கலநிகழ்வுகளிலும் திருக்குறள் ஓதியே செயல்படுத்துபவர்.

தமிழ்நாட்டில் முதன்மையாக உள்ள உலகத் திருக்குறள் பேரவை, உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் பேராயம், திருவள்ளுவர் தவச்சாலை ஆகியவற்றில் உயிரோட்டமான தொடர்புடையவர். இவர் எழுதி வெளியிட்டுள்ள திருக்குறள் நல்லுரை என்ற நூலுக்கு டாக்டர். வா.செ. குழந்தைசாமி, குன்றக்குடி பொன்னம்பல் அடிகளார், முனைவர். இளங்குமரன், சிலம்பொலி செல்லப்பன், பெருங்கவி கோ.வா.மு. சேதுராமன், முனைவர் கு. மோகனராசு, புதுகை தமிழ்மல்லன், ஹட்சன் சந்திரமோகன், நீர்வழி இயக்கம் ஏ.சி. காமராஜ், பாவலர். எழில்வாணன் ஆகியோர். அணிந்துரை அளித்திருத்தலே இவருடைய புகழுக்கும் திருக்குறள் தொண்டிற்கும் அடையாளமாகும்.

தனது நூல் வெளியீட்டு நிறுவனத்திற்குக் கூட ‘குறளினிப் பதிப்பகம்’ என்று பெயர் வைத்திருப்பதிலிருந்து திருக்குறள் மீது இவர் கொண்டுள்ள அளவற்ற காதல் வெளிப்படுகின்றது. இவர் போன்றவர்கள் எல்லாம் திருவள்ளுவர் ஞானமன்றம் வகுத்துள்ள 10 கட்டளைகளைத் தெரிந்துக்கொண்டு பன்முகப்பட்ட பரப்புரைகள் செய்வார்களானால் திருக்குறள் மக்கள் மயமாவது எளிதாகும். அண்மையில் சில திங்களாகத்தான் இவரை நேரில் காணவும் பழகவும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தொடர்புக் கொள்ளமுடியுமென நினைக்கின்றேன்.

தொண்டர்களுக்குகெல்லாம் தொண்டரான இரா. கோவிந்தன் தென்னிலையிலிருந்து எந்நிலைக்கு வரவேண்டுமென்று விரும்புகிறாரோ அந்நிலைக்கு உயர வள்ளுவம் துணை நிற்கட்டும் .

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்