Skip to content

திரு. பாலமுருகனடிமை,இரத்தினகிரி, வேலூர்.

திரு. பாலமுருகனடிமை, இரத்தினகிரி, வேலூர்.

வாய் பேசுவதில்லை இடையில் ஒரு கோவணத்தைத்தவிர வேறில்லை. இப்படி கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து, மக்களுக்கு அருளாசி வழங்கி, கரடுமுரடான ஒரு குன்றை சோலையாக்கி, பளிங்குக் கற்களால் முருகனுக்கு கோவில் கட்டி, ஆயிரக் கணக்கில் மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டே தமிழை நேசித்தும் திருக்குறளைப் போற்றி வரும் ஒரு ஞானியை, குருவைக்  காண எனக்கு திருவள்ளுவரின் அருள்தான் கூட்டுவித்தது என்றே சொல்லவேண்டும்.

திருவள்ளுவர் இயக்கங்களின் மாநாட்டை நான் ஆற்காட்டில் நடத்த அருள் கூட்டியவரே அருள்மிகு பாலமுருகன் அடிமை. அவரை நான் மறைந்த மா.செ. தமிழ்மணியோடும், பெங்களூர் கி.சு. இளங்கோவனோடும் சென்று வணங்கும் போது என்னை வியப்பில் ஆழ்த்திய செயலொன்று நடந்தது.

நான் மாநாட்டைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லிக்கொண்டே வந்தபோது சுவாமி தன் உதவியாளரிடம் சைகையால் ஒரு குறிப்பைக் காட்டினார். சுவாமி நான் அனுப்பியிருந்த அனைத்து அறிக்கைகளையும் ஒரு கோப்பில் வைத்து பாதுகாத்திருந்ததை எடுத்து வரச் சொன்னார். பின்னர் அவர் வழக்கம்போல ஒரு கரும் பலகையில் தங்களின் அனைத்துசெயல்திட்டத்தையும் அறிந்து மகிழ்கிறேன். ஆனால், தற்போது பொருளுதவி செய்ய இயலவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து கோவிலுக்கு “அறுமுகக்குளம்” ஒன்றை உருவாக்குகிறேன். எனது அன்பர்கள் ஆர்க்காட்டில் உள்ளார்கள். அவர்கள் வாயிலாக அனைத்து உதவியும் கிடைக்கும் என்று எழுதிக் காட்டினார்.

“காலமறிவான், கருணை புரிவான்” என்று அவரது சீடர் மாநாட்டில் கவிதை வாசித்தபோது நான் மெய்சிலிர்த்துப் போனேன். அந்த அளவிற்கு 1.50 இலட்சம் நிதியீட்டவும் இரண்டு நாள் மாநாடு நடத்தவும் எனக்கு நம்பிக்கையையும் வாய்ப்பையும், வழங்கிய பாலமுருகன் அடிமையை இந்த சிறு ஆவணத்தில் குறிக்க வாய்த்ததே என்று மகிழ்கிறேன். அவரைக்  குறித்து பெருநூலே எழுதவேண்டும்.

ஆனாலும், எளியனின் இந்த முயற்சியில் அவரது பெயரும் விளங்கவேண்டும் என்பதால் இணைத்துள்ளேன். பொருத்தருள்வீர்!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்