திரு. வை. மா. குமார், திருவண்ணாமலை.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி”என்ற குறளை செயல்படுத்தி வரும் எனது இப்போதைய திட்டத்திற்கு அச்சாரமாக அமைந்தது வை.மா.குமார் சொன்ன ஒரு நிகழ்வு.
இலம்பாடிகளாக ஊர் சுற்றி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தின் பசியைப் போக்க தனது இளமைப்பருவத்தில் தான் சிற்றூரில் பிச்சை எடுத்ததை அவர் கூறியபோது என் கண்கள் குளமாயின. மதுரைப் பகுதியில் பிறந்து தற்போது சென்னையில் வாழும் ஒரு தையற் கலைஞர்தான் வை.மா. குமார். தான் செய்யும் தொழிலுக்கு இடையூறு வருமே என்று கருதாமல் கடை முழுவதும் திருக்குறள் படங்கள், ஒரு இலட்சம் திருக்குறள் ஒட்டிகள், துண்டுகளென்று நிரம்பியிருக்கும் சூழலில் அவரைக் கண்டு உரையாடினேன்.
நாகை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரான நான் சென்னைத் துறையின் ஆய்வுக்குச் செல்லும் போதெல்லாம் மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா வீதியில் உள்ள அவரது கடைக்குச் செல்லாமல் திரும்பியதில்லை. அவருக்கு திருக்குறள் அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாரைப் பற்றியும் விமர்சனம் இருந்தது. ஆயினும், அவர்களை அழைத்து வாரந்தோறும் தான் அமைத்திருந்த திருக்குறள் கழகத்தில் கூட்டம் நடத்துவதில் தவறுவதே இல்லை.
இவருடைய உழைப்பையும், கருத்தையும் அறிந்துதான் சேலம் அர்த்தநாரி என்ற தோழர், தான் எழுதிய தொழிலாளிவர்க்கப் பார்வையில் திருக்குறள் என்ற நூலுக்கு இவரின் அணிந்துரையை தன் நூலில் வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளார். இத்தகைய திருவள்ளுவர் திருத்தொண்டர்கள்தான் இத்தொகுப்பை அணிகலனாக்கும் சிறப்புக்குரியவர்கள் ஆவார்கள்.