Skip to content

திருமதி. ரூபி ரெஜினா ,செங்கல்பட்டு

ரூபி ரெஜினா ,செங்கல்பட்டு

திருக்குறள் பரப்புரைக்காக ரூ.20,00,000/- (இருபது இலட்சம்) தொடக்கப்பள்ளி ஆசிரியை   ஒருவர் செலவு செய்துள்ளார் என்று செய்தித்தாளில் படித்த போது நான் வியப்பில் உறைந்து போய்விட்டேன். அவரை உடனடியாக செங்கல்பட்டுச் சென்று சந்தித்து உரையாடியபோது “ஆசிரியர் ஊதியத்தைத் தவிர வேறெதுவும் வருமானம் இல்லாத போதும், திருக்குறள் ஒன்றே அனைத்து சமயத்தவர்க்கும் பொதுவான நூலென்பதாலும், மாணவர்கள் சிறுவயது முதலே திருக்குறளின்பால் ஆர்வம் ஏற்படச் செய்யவேண்டுமென்பதாலும் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளேன். ஒரு அதிகாரத்திற்கு ஓராயிரம் நூல் என்ற கணக்கில் 133 ஆயிரம் நூல்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டுமென்று திட்டமிட்டேன்” என்றார்.

நூல் ஒன்றுக்கு 15 ரூபாய் என்றாலும் 20 இலட்சம் தொடுகிறதே எப்படி ஈடு செய்வீர்கள் என்று மற்றவர்களைப் போலவே நானும் கேட்டேன். புதிய தலைமுறை இதழில் நல்லாசிரியராகத் தேர்வு செய்தபோது அவர்களும் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னப் பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. குறைந்த விலையில் ஒரு மனையை வாங்கியிருந்தேன். அது தற்போது விலையுயர்ந்தது எனக்குக் கை கொடுத்தது என்றார். எத்தனை பேருக்கு வீட்டுமனையை விற்று திருக்குறள் பரப்ப மனம் வரும்?.

நாங்கள் நடத்தும் ஞானமன்ற மாநாடுகளில் எல்லாம் கலந்து கொள்வதோடு நிதியுதவியும் அளித்து வருகிறார். ஒரு கல்வி அலுவலர் தன்னோடு இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு மகிழ்ச்சி. ஒரு பள்ளியாசிரியர் தனது சேமிப்பு முழுவதையும் திருக்குறளுக்கு செலவு செய்வது எனக்கு மகிழ்ச்சி. இவருடைய நல்லுதவியுடன் தான் கவனகர் எல்லப்பன் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பெருமை பெற்றார். இப்படி யார் எங்கு திருக்குறள் பணியாற்றினாலும் ஓடிச்சென்று உதவும் இந்த அம்மையார்  பிறப்பால்  கிறிஸ்துவராயிருந்தாலும், உலகப் பொதுமுறையான திருக்குறளைப் போற்றி பரப்புவது மற்றவர்களுக்கும் தூண்டுகோலாக அமைகிறது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய செய்தியல்லவா?

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்