Skip to content

பேராசிரியர் கு .மோகனராசு,பெருங்குடி , சென்னை.

பேராசிரியர் கு .மோகனராசு,பெருங்குடி , சென்னை.

“உலகத் திருக்குறள் மையம்” என்ற அமைப்பை 45 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திருக்குறள் சிற்றூர்களை உருவாக்க முயன்றவர் இவர். இவரோடு இணைந்து பணியாற்றிய பல நூறு அறிஞர்களும் தொண்டர்களும் தனித்தனி அமைப்பாக பிரிந்து சென்றாலும், தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்று ஆயிரக்கணக்கானத் திருக்குறள் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறார். 200 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.   தமிழக அரசால் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டவர். இப்போது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இவருக்கென ஒரு அறை ஒதுக்கப்பட்டு அதில் வாரம் ஒரு நாள் ,சனிக்கிழமை அன்று ஆய்வரங்குகள் நடத்தி வருகிறார். அந்த ஆய்வரங்கு எண்ணிக்கை 1000 நோக்கி நகர்கிறது . தனது பணி ஓய்வுப் பணப்பயன்கள் முழுவதையும் (ரூ.20,00,000/-) திருக்குறள் பணிக்காகவும் அதுகுறித்து காலாண்டு இதழ் நடத்துவதற்காகவும் ஒதுக்கியுள்ளார்.

தனது மகன்கள் மூவரையும் சிறந்த மருத்துவர்களாக்கி அவர்களது இல்ல நிகழ்வுகளை திருக்குறள் ஓதியே நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடக்கத்தில் திருவள்ளுவரைத் தெய்வமாக வணங்குவதை ஏற்காதவராக இருந்தாலும் தற்போது “திருவள்ளுவரே இறை! திருக்குறளே மறை!” என்பதை ஏற்று தானும் வணங்கி மற்றவர்களையும் வணங்குமாறு வழிநடத்துகின்றார். அண்மையில் குடந்தையில் மறைந்த திருக்குறள் தூதர் வ. கலியமூர்த்தி இதனை அடிக்கடி என்னிடம் கூறி அகம் மகிழ்வார்.

இவரது பல திட்டங்களில் மார்கழி அதிகாலை வழிபாட்டு முறை புதுமையானதும், போற்றத்தக்கதுமாகும். இவரால் திருக்குறள் தூதர், திருக்குறள் மாமணி, திருக்குறள் தொண்டர் என பட்டங்கள் வழங்கப்பட்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் இருப்பர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வள்ளுவர் கோட்டத்தையே திருக்குறள் தலைமை இயக்ககமாக்க இவரும் குரல் கொடுக்க வேண்டுமென்பது எனது அவா! அண்மையில் இவரோடு திருக்குறள் பரப்புரையில் இணைந்து  ,தோளோடு தோளாக  நின்று பணியாற்றிய  இவரது மனைவி சாந்தி மோகனராசு மறைந்தது இவருக்கு பேரிழப்பாகும்.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்