கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்.
“கற்க கசடற அறக்கட்டளை” இலங்கை ஜெயராஜ் ஐயாவின் “உயர் வள்ளுவம்” வகுப்புகள் மூலமாக 2017 பிப்ரவரி மாதம் முதல் திருக்குறள் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டு வருகிறது . இன்றைய தேதியில் யூட்யூபில் https://youtube.com/@KarkaKasadaraUyarValluvam 21600 பேர் கேட்பதற்கு பதிவு செய்து, பல லட்சம் பேர் பார்த்தும் கேட்டும் வருகிறார்கள்
“எளிமையின் எல்லையில் இருந்து பரிமேலழகர் உரைக்கு இலங்கை ஜெயராஜ் அவர்கள் விளக்கம் அளித்துவருகிறார்” என்று பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் ஒருமுறை கூறினார்
குறள்அறம் வளர்கிறது .
பல நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன .
திரு மகேஷ் என்பவர் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயர் வள்ளுவம் வகுப்பில் சேர்ந்தார். கொரோனா காலத்தில் வேலை அதிகமாக இல்லாத போது இந்த வகுப்பை அவர் கேட்க நேரிட்டது .அது முதல் அவர் தொடர்ந்து கேட்டு வருகிறார்.
அப்போதிலிருந்து எனது தொடர்பில் வந்தார் .அவர் தனது அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுண்டு .அவர் காஞ்சிபுரத்தில் பட்டுத்தறி நெய்து கொண்டிருப்பவர் .38 வயதினர் . தொடக்கப் பள்ளியைத் தாண்டாதவர். (வள்ளுவர், கம்பர் இருவரும் நெசவுத் தொழில் செய்து வந்ததாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்ற சொலவடையும் இதற்கு சான்று)
திருக்குறள் தனக்குள் நல்லபல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது ,அதை உணர்வுபூர்வமாக தான் உணர்வதாகவும் ,தன்னைச்சுற்றி உள்ளவர்கள் தன்னிடம் ஒரு மாற்றத்தை காண்பதாகவும் அவர் அடிக்கடி கூறுவது உண்டு .
அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளையும் கூறி ,எனக்கே நான் எப்படி அந்த சமயத்தில் அப்படி நடந்து கொண்டேன் என்பது தெரியாது என்று கூறுவார்.
இது சென்ற வாரம் நடந்த நிகழ்வு
அவர் இலங்கை ஜெயராஜ் ஐயாவின் வகுப்புகளை மிகவும் கவனமாகக் கவனித்து வருபவர். கையில் பரிமேலழகர்உரை நூல் ஒன்று எப்பொழுதும் இருப்பது உண்டு. அந்த வகுப்பு முடிந்தவுடன் அதை பற்றி மேலும் சிந்திப்பதும் உண்டு .
ஆனாலும் அவருக்கு ஒரு ஏக்கம்…
பிழைகள் இல்லாத பரிமேலழகர் உரை வாங்கினால் நல்லது என்று அவரது மனதில் பட்டது . அவர் கையில் இருக்கும் உரையில் பிழைகள் மலிந்துள்ளன.
“பாமரருக்கும் பரிமேலழகர்”பற்றி பலமுறை உயர் வள்ளுவத்திலும் மற்றும் இணையத்தின் வழியாக பலமுறைபதிவிட்டு இருந்தாலும் அதைப் பற்றி அவருக்கு முழு விவரம் தெரியாது . அது 1890 பக்கங்கள் 3 தொகுதிகள் கொண்டது. https://sandhyapublications.com/book/62d630091c08b93e107f8416
ஒரு நல்ல உரை வேண்டும் ,பிழையில்லாத உரை வேண்டும் என்று சந்தியா பதிப்பகம் திரு நடராஜன் அவர்களை அவர் அணுகியுள்ளார்.அப்போது அவர் பாமரருக்கும் பரிமேலழகர் பற்றிக் கூறிவிட்டு மூன்று தொகுதிகள் அதன் விலை ரூபாய் 2100 என்று கூறியுள்ளார் .
தன்னால் அவ்வளவு தொகை உடனே கொடுக்க இயலாது . தற்போது நெய்து கொண்டிருக்கும் பட்டுச் சேலையை நெய்து முடித்தவுடன் வரக்கூடிய ஊதியத்தில் இருந்து அவரால் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
நடராஜனும் உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். நான் நூலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்
அதன்பிறகு நானும் அவரை தொடர்பு கொண்டு நீங்கள் முழுத் தொகையும் கொடுக்க வேண்டியதில்லை,எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து விடுங்கள் என்றேன் .ஆனால் அவர் சொன்னார் பத்து ஆண்டுகள் உழைப்பு நான் குறைவாகக் கொடுத்து வாங்க விரும்பவில்லை என்று கூறினார் .
எனக்கும் அவரது பொருளாதார நிலை புரிந்தது .நான் அவரிடம் கூறினேன் …எனக்கு உங்கள் குறளின் மீதான ஆர்வம்புரிகிறது . எனவே,நீங்கள் ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் என்று வைத்து ரூபாய்1330 செலுத்தி விடுங்கள் ,மீதியை நான்கொடுத்து விடுகிறேன் என்று கூறினேன்
இரண்டு நாட்களுக்கு முன் அவர் அழைத்து ,நான் சந்தியா பதிப்பகத்திற்கு பணம் செலுத்தி விட்டேன் என்று கூறினார் .நான் எவ்வளவு என்று கேட்கவில்லை .
ஆனால் சற்று நேரம் கழித்து நான் சந்தியா நடராஜனை அழைத்து அவர் பணம் செலுத்தி இருப்பார் அதில் எவ்வளவு செலுத்தி இருப்பார்களோ அது தவிர மீதி தொகையை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறினேன் .
அவர் சொன்னார்
திரு மகேஷ் முழு தொகையான ரூபாய் 2100 செலுத்தி விட்டார் என்று கூறினார் .நான் உடனே மகேஷை அழைத்து ஏன் முழு தொகை அனுப்பினீர்கள் ,குறைவாக அனுப்பி இருக்கலாமே என்று கூறினேன்.
இந்த நூலுக்குப் பின்னால் உள்ள
உங்கள் உழைப்பை நான் உணர்கிறேன்.
அந்த உழைப்புக்கு உரிய தொகையை, அதில் உள்ள அறிவுச் செல்வத்திற்கு உரிய தொகையை கொடுக்க இயலாது . எனவே அந்த நூலிற்கு உரிய விலையை முழுவதும் கொடுத்து விட்டேன் ,என்றார்
இதுவே , இலங்கை ஜெயராஜ் ஐயாவின் திருக்குறள் வகுப்புகளில் சேர்வதற்கு முன் , நீங்கள் அப்படி ஏதாவது கூறியிருந்தால் ஒரு வேளை அதை ஏற்றுக் கொண்டிருப்பேன்.
ஆனால் இப்பொழுது எனது மனம் ஓவ்வவில்லை என்றார் .
இதுதான் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதோ?
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். ( குறள் – 973)
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
— மு. வரதராசன்