தி. தாமரைச்செல்வி (01.09.1963)
திருமதி விமலா தேவி தியாகராசன் இணையரின் மகளாக 01.09.1963 இல் பிறந்தவர். தாமரைச்செல்வி புதுவை அரசு கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறையில் எம்.ஃபில்., பட்டமும் (நெறியாளர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி) புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் முனைவர் பட்டமும் (நெறியாளர் முனைவர் அறிவுநம்பி) பெற்றவர்.
வள்ளுவர் சிக்கல்கள், ‘திருக்குறள் காட்டும் தமிழர் சமுதாயம் குடும்பம் அரசு’ (மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் முதல் பரிசு பெற்ற நூல்), ‘திருக்குறள் பதிப்பு வரலாறு’ (தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது மற்றும் திருக்குறள் 200ஆவது பதிப்பு ஆண்டின் சிறப்பு வெளியீடு), ‘இலக்கிய இதழ்கள்வழி திருக்குறள் ஆராய்ச்சி’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். “திருக்குறள் நெறி விளக்கக் கட்டுரைகள்” என்ற நூலைப் பதிப்பித்துள்ளார்.
50க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கு கொண்டுள்ளார். 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். புதுச்சேரி அரசு கல்லூரிகளில் 20 ஆண்டுகளுக்குமேல் பணி செய்கிறார். தற்போது தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார். திருக்குறள் பதிப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள் தொகுக்கும் பணியை மேற்கொள்கிறார். திருக்குறள் ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆய்வாளராகத் திகழ்ந்து வருகிறார். தொடர்ந்து திருக்குறள் தொடர்பாக ஆய்வுசெய்து வருபவர்.