சின்னசாமி இராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ் (12.02.1957)
திருமதி குப்பாயி அம்மாள் திரு வை. சின்னசாமி இணையரின் நான்காவது மகனாக 12.02.1957 இல் பிறந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கோவிந்தம்பாளையம் இவரது சொந்த ஊர். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பும், சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை கணிதமும் முடித்தார்.
இந்தியத் தொலைத்தொடர்பு துறை, இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 7 ஆண்டுகள் பணி செய்தார். இந்திய வருவாய் பணியில் 1985 இல் சேர்ந்தார். இந்திய குடிமைப்பணி தேர்வு எழுதினார். பணியில் சேர்ந்து இளநிலை சட்டமும் பயின்றார். இந்தியாவில் கல்கத்தா, புதுதில்லி, விசாகப்பட்டிணம், சென்னை, கோயம்பத்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். நான்காண்டுகள் சிங்கப்பூர் தூதரகத்தில் பணியாற்றினார். மத்திய அரசுப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய 2003இல் குடியரசு நாள் விழாவில் விருதும் பெற்றார். 62ஆம் அகவையில் ஓய்வுபெற்றார். ‘திருக்குறள் உவமை நயம்’ என்ற இவரது முதல் நூல் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகி பெரும்புகழ் பெற்றார். சமூக ஊடகம் வாயிலாக 2014 முதல் வள்ளுவர் குரல் குடும்பம் என்ற தன்னார்வ அமைப்பு மூலம் 200க்கும் மேற்பட்ட அறிஞர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறார். இவர் எழுதிய “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற மூன்று தொகுதிகள் கொண்ட நூல் பரிமேலழகரைப் பலருக்கும் கொண்டு சேர்த்தது. இவரது துணைவியார் ‘நிழல் காட்டும் நிஜங்கள்’ என்று திருக்குறளின் முதல் 108 அதிகாரங்களுக்கு ஒரு பக்க படத்துடன் கதைகளாக வெளியிட்டுள்ளார். இவரது ‘காந்தியடிகள் வாழ்வில் வள்ளுவம்’ என்ற நூல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்று விளங்குகிறது.
வள்ளுவர் குரல் குடும்பம் மற்றும் வலைத்தமிழ் அமைப்பின் வழி இணைய வழியில் திருக்குறள் ஆர்வலர்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்திவருகிறார். திருக்குறளாகவே வாழ்ந்து வருகிறார். கரூர் சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகளின் அருளாசியைப் பெற்றவர்.