இலங்கை ஜெயராஜ் (24.10.1957)
இலங்கை, யாழ்ப்பாணம் நல்லூரை அடுத்த செட்டிக்குளத்தில் 24-10-1957 அன்று பிறந்தவர். பெற்றோர் இலங்கைராஜா, குலமணி. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1980இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவினார். கம்ப இராமாயணம் தொடர்பாகச் சொற்பொழிவுகளை ஆற்றும் இவருக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலித் தலங்காவில் ஆலயத்தினர் ‘கம்பவாரிதி’ என்ற பட்டத்தை வழங்கினர்.
திருக்குறள், கம்ப இராமாயணம் போன்ற மரபிலக்கியங்களிலும் சைவ சித்தாந்தத்திலும் புலமை பெற்றவர். இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவை தவிர ஆண்டுதோறும் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்களையும், இசைவிழாக்களையும், நாட்டிய விழாக்களையும் நடத்தி வருகிறார். அதோடு உகரம் இணைய இதழில் இலக்கியம், அரசியல், சமயம், சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருவதோடு வாசகர்களின் கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் பதிலளித்து வருகிறார்.
1986ஆம் ஆண்டு நல்லூரில் கம்பன் கோட்டக் கட்டிடம் நிறுவியமை, 2003ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கோட்ட கட்டிடம் நிறுவியமை, 2005ஆம் ஆண்டு கொழும்பில் கம்பன் கோட்ட ஐசுவரியலட்சுமி கோயில் நிறுவியமை முதலான பணிகள் குறிப்பிடத்தக்கவை.
கம்பர் விருது – தமிழ்நாடு அரசு (2017), சித்தாந்த கலாநிதி – தருமை ஆதீனம் (2017), சிவஞானக்கலாநிதி – திருவாவடுதுறை ஆதீனம் (2015), கம்ப கலாநிதி இரா. இராதாகிருஷ்ணன் விருது – சென்னைக் கம்பன் கழகம், உலக சாதனையாளர் விருது – பேராசிரியர் அறவாணன் அறக்கட்டளை, தமிழ்நாடு, பானுமதி அறக்கட்டளைப் பரிசு – புதுவைக் கம்பன் கழகம், கம்பர்சீர் பரவுவார் விருது – வேலூர்க் கம்பன் கழகம், கபிலர் விருது – திருக்கோவலூர்ப் பண்பாட்டுக்கழகம், கம்பன் விருது – சென்னைக் கம்பன் கழகம், 2001 முதலான விருதுகளைப் பெற்றவர்.
அழியா அழகு, பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள், உலகம் யாவையும், மாருதி பேருரைகள், விஸ்வரூபம், செல்லும் சொல்வல்லான், ஜெயராஜ்ஜியம், உன்னைச் சரணடைந்தேன் முதலான நூல்களைப் படைத்தவர்.
இலங்கை ஜெயராஜ் அவர்கள் இலங்கை நாட்டில் பேசியதைவிட தமிழ்நாட்டில் பேசியதுதான் அதிகம். தமிழ்நாட்டில் இவர் பேசாத கம்பன் கழகங்களே இல்லை எனலாம். சென்னை சேக்கிழார் ஆய்வு மையத்தில் ஆண்டுதோறும் இவருடைய சொற்பொழிவு இடம்பெறும். பழகுவதற்கு இனியவர். அன்பானவர். பண்பானவர்.
என் அன்பிற்குரிய நண்பர் திரு. செந்தில்குமார் அவர்கள் பொறுப்பேற்று நடத்திவரும் உயர் வள்ளுவம் அமைப்பு மாதந்தோறும் திருக்குறள் பரிமேலழகர் உரையைப் பாடமாக நடத்தி வருகிறது. அவ்வமைப்பில் ஒவ்வொரு அதிகாரமாக மாதந்தோறும் தமிழகத்திற்கு வந்து திருக்குறள் வகுப்பை இலங்கை ஜெயராஜ் அவர்கள் நடத்திவருகிறார். இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இலங்கையில் இருந்தபடியே இணையவழியில் (Online) மாதந்தோறும் பேசிவருகிறார்.
2016 செப்டம்பர் மாதம் இலங்கை ஜெயராஜ் அவர்களின் அன்பிற்குரிய அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருடன் தங்கியிருந்த ஐந்து நாட்களும் இனிமையாவை. அப்பொழுதுதான் ஒரு உண்மையைக் கண்டுகொண்டேன். இலங்கை ஜெயராஜ் அவர்கள் பேசுவதில்தான் கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சமைப்பதிலும் வல்லவர். சமைப்பதோடு அல்லாமல் உணவைப் பரிமாறி உண்ணுவிப்பதிலும் சமத்தர் என்பதை அறிந்தேன். கொழும்புவிலும், யாழ்ப்பாணத்திலும் கம்பக் கோட்டம் அமைத்துக் கன்னித்தமிழ் வளர்த்தவர் இவர். கம்பராமாயணமும் பெரியபுராணமும் இவருக்கு இரண்டு கண்கள் எனில், திருக்குறள் இவரது மூன்றாவது நெற்றிக்கண்.
அவர் இல்லத்திற்கு முன்பு இருக்கிற கம்பன்கோட்ட ஐசுவரியலட்சுமி கோயில் அவர் உழைப்பின் வெளிப்பாடு. அவர் உழைப்பைக் கண்டு பிரமித்துப்போனேன். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணியினை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். இலங்கை செல்லும் போதெல்லாம் (12 முறை) அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கிற்கும் நான்கு தளங்களில் வழிபாட்டிற்குரிய அமைப்பை உருவாக்கியிருக்கும் திறன் போற்றுதலுக்கு உரியது. உலகம் சுற்றித் தமிழை வளர்க்கும் கம்பவாரிதியைக் காத்துப் போற்றுதல் தமிழர்க் கடன்.