பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் (15.10.1953)
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகத்தில் (துர்கம் என்றால் கோட்டையுடன் கூடிய மலை என்று பொருள்) பிறந்தவர். தியாகதுருகத்தில் உள்ள மலையில் திப்பு சுல்தான் கட்டிய கோட்டைகளும் விட்டுச் சென்ற பீரங்கிகளும் இன்றும் உள்ளன.
மைய மாநில அரசுகளின் தேசிய விருதினைப் பெற்ற புலவர் ப. அரங்கநாதன் – திருமதி பழனியம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 15/10 /1953 ஆம் நாள் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் எழுவர். இவரோடு சேர்த்து எண்மர். உயர்நிலைக்கல்வியைத் தியாக துருகம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், தமிழ் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பினைச் (1971-1976) சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ‘பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஃபில் (1976-1977), பட்டம் பெற்றவர். தமிழ் மொழித்துறையில் ‘சங்க இலக்கியத்தில் வேந்தர்’ எனும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (1978 – 1982) பெற்றவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உயர்நிலை ஆய்வளராகப் (1983 – 1984) பணியாற்றியவர்.
21.06.1984 ஆம் நாளன்று சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர். இணைப் பேராசிரியராகப் பேராசிரியராக உயர்ந்து 2010 முதல் தமிழ்மொழித்துறையில் பேராசிரியராகவும் அத்துறையின் தலைவராகவும் சிறக்கப் பணியாற்றியவர். 31.07.2014 அன்று பணிநிறைவு பெற்றவர்.
சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநராகவும் திருக்குறள் ஆய்விருக்கையின் பொறுப்பாளராகவும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகம் தனது 150 ஆவது விழாவைக் கொண்டாடுகிறபோது இவர் இயக்குநராக பொறுப்பேற்றிருந்தார். அச்சமயத்தில் பல்கலைக்கழக சார்பாக 150 நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியவர்.
பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, புரட்சிக் கவிஞரும் பொதுவுடைமையும், சங்க இலக்கியத்தில் வேந்தர், பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள், வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள், சித்தர்வழி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள், தெய்வப்புலவரின் திருவாய்மொழி, மாணவர்களுக்கான திருக்குறள், திருக்குறளில் இறைநெறி, திருக்குறள் – கவினுரை என 51 நூல்களை எழுதியவர்.
திருமந்திரம், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் ஆகிய நூல்களை 108 வாரம் எனக் கணக்கிட்டுப் பத்துமுறை, பத்து 108 வாரங்கள் தமிழ் அரசின் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் சொற்பொழிவு ஆற்றியவர். திருவாசகம், திருமந்திரம், சித்தர்கள் தொடர்பான மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்தியவர்.
மருத்துவ மாமணி இரத்தினவேல் சுப்பிரமணியனார் பெயரில் அமைந்த செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் இராம. சுப்பிரமணியன் அவர்களின் அன்புக் கட்டளைக்கு ஏற்ப தமிழ் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்குப் பதினைந்து ஆண்டுகள் இலவசமாக வகுப்புகளை நடத்தியவர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
சனவரி 2021இல் திருக்குறள் கவினுரை, சூலை 2021இல் தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும் (தொகுப்பாசிரியர்) பத்து தொகுதிகள், செப்டம்பர் 2021இல் ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயர் ஆய்வு என்ற நூலும் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. தற்போது உங்கள் கைகளில் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் திருக்குறள் களஞ்சியம் தொகுப்பு ( பத்து தொகுதிகள், சுமார் 6000 பக்கங்களுக்கு மேல்) நூலும் ஏப்ரல் 2022இல் வெளிவந்துள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, மொரீசியசு, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் ஆகிய அயல்நாடுகளுக்குச் சென்று தெய்வத் தமிழின் பெருமையை ஓங்கி ஒலித்தவர். திருவாசகம் 108 வாரத் தொடர் சொற்பொழிவு நிறைவின்போது தவத்திரு ஊரன் அடிகளார் ‘சொற்கோ’ எனும் விருதினை இவருக்கு அளித்துப் பாராட்டினார். இலங்கை அரசின் தமிழ் சாகித்திய விருது உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும் (பத்து தொகுதிகள்)
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10 தொகுதிகள்- 6000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995