பேராசிரியர் அ. அறிவுநம்பி (10.11.1952 – 09.04.2017)
காரைக்குடியில் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கம் அவர்களுக்குத் திருமகனாக 10.11.1952 ஆம் நாளன்று பிறந்தவர். தமிழ் கற்றுத் தேர்ந்தவர்; தங்கப் பதக்கம் பெற்றவர்; கவிஞர்; கவியரங்கம் பல கண்டவர்; “தமிழகத்தில் தெருக்கூத்து” என்ற பொருள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். புதுச்சேரி கலைவாணி நகர், இலாசுப்பேட்டையை வாழ்விடமாகக் கொண்டவர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டத்தையும், 1980 ஆம் ஆன்டு முனைவர் பட்டத்தையும் பெற்றவர். தமிழ் இதிகாசம், நாடகம், பழங்காலக் கலைகளில் நிபுணத்துவம் கொண்டவராகத் திகழ்ந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக இணைந்து, பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர் பொறுப்புகளை வகித்தார். தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் பொறுப்பு இயக்குநராகவும் விளங்கியவர்.
கூத்தும் சிலம்பும், தமிழகத்தில் தெருக்கூத்து, நாட்டுப்புறக் களங்கள், பாவேந்தரின் பன்முகங்கள், கம்பரின் அறிவியல், இலக்கியங்களும் உத்திகளும், செம்மொழி இலக்கிய சிந்தனைகள் முதலான 23 சிறந்த நூல்களை எழுதி பெருமை பெற்றவர்.
தமிழ் முதுகலையில் பல்கலைக்கழக முதன்மை பெற்றமைக்காக தெ.பொ.மீ. தங்கப்பதக்கப் பரிசு, கம்பரின் அறிவியல் நூலுக்காகத் தமிழகம் மற்றும் புதுவை அரசுகளின் பரிசு, கம்பர் காட்டும் மள்ளர் மாண்பு என்ற நூலுக்காகப் புதுவை அரசின் தொல்காப்பிய விருது, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத் தமிழ்மாமணி விருது முதலான பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர்.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், புகழ்பெற்ற ஆய்வாளருமான முனைவர் அ. அறிவுநம்பி 09.04.2017 அன்று புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.
பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் நல்ல நண்பர்; பழகுவதற்கு இனியவர்; சிறந்த பண்பாளர்; நேர்கோட்டு வாழ்க்கையர்; நேர்மையானவர். பல்கலைக்கழகப் பணி நிமித்தமாக அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு வருவதும் நான் அவர் துறைக்கும் செல்வதும் என எங்கள் நட்பு ஆழமானது. அவருடன் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் சார்பில் நடைபெறும் தேசிய திறனறித் தேர்வுக்கான (NET) வினாத்தாள் தயாரிப்பது, விடைத்தாள் திருத்தம் செய்வது ஆகியவற்றிற்காக பூனே, புதுதில்லி ஆகிய இடங்களில் தங்கி அவருடன் பேசி மகிழ்ந்த நாட்கள் இன்றும் என்நெஞ்சில் பசுமையாக உள்ளன.