Skip to content

மருத்துவர் க. கோபால் எம்.பி.பி.எஸ்

மருத்துவர் . கோபால் எம்.பி.பி.எஸ் (12.03.1950)

திருமதி. அழகம்மாள், திரு.கந்தசாமி இணையருக்கு மூன்றாம் மகனாக 12-03-1950 அன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகிலுள்ள மேலவங்காரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தான் பிறந்த ஊரிலும் திருச்சியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்றார்.

1974இல் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியில் மருத்துவ பணியைத் தொடங்கினார். புதுதில்லி பல்கலையில் தாய்சேய் நல மருத்துவப் பட்டம் பெற்றார். குழந்தைகளைத் தாக்கும் இரணவாத சன்னியை நீக்கி காப்பாற்றினார்.

பெரியாரைத் துணைக்கோடல் எனும் அடிப்படையில் அறிஞர்கள் கி..பெ. விஸ்வநாதம், குன்றக்குடி அடிகளார், இரா.இளங்குமரனார் ஆகியோர் துணையால் இவருக்குத் திருக்குறள் நாட்டம் மிகுந்தது. தன் இல்லத்தில் தனிநபர் நூலகம், திருக்குறள் வகுப்பு, நிலவுக் கூட்டங்கள்வழி மாணவர்களை நல்வழிப்படுத்தியுள்ளார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிகழ்வுகளில் குறள் குறித்த கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் வழங்கியுள்ளார். பல இதழ்களிலும் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார். இந்திய மருத்துவச் சங்கத்தின் திருச்சி கிளை இவருக்கு ஊரக நல்மருத்துவர் விருது வழங்கி பெருமைபடுத்தி உள்ளது. மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளார். தமிழ் திருமணங்கள் நடத்தி வைத்துள்ளார். தன் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டியுள்ளார்.

வள்ளுவத்தில் அறிவியல் (1992), வருமுன்காப்போம் கருவறையிலிருந்தே (2002), இல்லறமே இன்ப நிலையம் (2012), திருக்குறள் பன்மணிமாலை வினவலும் விடையிருத்தலும் (2015), The Multigemmed Garland of Thirukkural questioning and Answering (2017) திருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் (2019) ஆகிய நூல்களை எழுதியவர். மேலும் திருக்குறள் போற்றி (உரையுடன்), திருக்குறள் சூடி – (மூலமும் உரையும்) ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995