Skip to content

பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்

பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் (24.09.1941)

மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் திரு. தெண்டபாணிப் பிள்ளை, திருமதி  தையல்நாயகி  இணையருக்கு  24-09-1941 அன்று பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் பிறந்தார். கும்பக்கோணம் அரசு கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர்ச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். வைணவ உரைவளம் என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாராய்ச்சி மணிப்பிரவாள நடையில் அமைந்த திவ்யப்பிரபந்த உரைகளைப் பற்றியதாகும். இவர் பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவர் ஆவார்.

பச்சையப்பன் கல்லூரி, பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, சென்னைக் கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றிலும் ஈராண்டுகள் அயற்பணியாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலுமாக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணிசெய்துள்ளார். இறுதியாக 1993இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவரானார். ஈராண்டுகள் மாலைக்கல்லூரிப் பொறுப்புப் பேராசிரியராகவும் மூன்று மாதங்கள் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு அடைந்தார்.

புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியராக 2009 முதல் 2011 வரை பணியாற்றினார். 2018 ஜூலை முதல் 2021 ஜூலை வரை மூன்றாண்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். தினமணி போன்ற செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வைணவ உரை வளம், காப்பிய விருந்து (கம்பர்வால்மீகி ஒப்பீடு), குறுந்தொகைத் தெளிவு, கற்பக மலர்கள் (திருக்குறள் கட்டுரைகள்), மாணிக்கவாசகர், மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி விளக்கம், கம்பநாடர்புதிய வெளிச்சம், கம்பராமாயணத்தில் சகோதரத்துவம், இராவணனைச் சந்திப்போம், கம்பர் போற்றிய கவிஞர் (திருவள்ளுவர்), இராவணனின் மைந்தர்கள், இராம காதைமுதலும் வழியும் முதலான நூல்களைப் படைத்தவர்.

சென்னைகோவை கம்பன் கழகங்கள், கங்கைப் பதிப்பகம் ஆகியன வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்புகளின் பதிப்பாசிரியர் குழுவில் ஞானசுந்தரம் இடம்பெற்றார். அஞ்சல்வழிக் கல்வி பயிலும் சிங்கப்பூர் வாழ் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்பிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்ததுமும்பைகொல்கத்தாதில்லிபெங்களூருகொல்லம் ஆகிய நகரங்களுக்குச் சென்று இலக்கிய, சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்அமெரிக்காஇலங்கைசிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று தமிழ்ப் பணி ஆற்றியுள்ளார்.

நல்லாசிரியர் விருது (கோவை நன்னெறிக் கழகம்), சிறந்த தமிழ்ப் பேராசிரியர் விருது (சென்னைச் சேக்கிழார் ஆராய்ச்சி மையம்), தமிழறிஞர் விருது (சென்னைக் கம்பன் கழகம்), சடையப்பர் விருது (மதுரைக் கம்பன் கழகம்), கபிலவாணர் விருது (திருக்கோவிலூர் கலைப்பண்பாட்டுக் கழகம்), இராசா சர் முத்தையா செட்டியார் விருதும் உருபா இரண்டு இலக்கம் பரிசும் (இராசா சர் முத்தையா செட்டியார் அறக்கட்டளை), கவிஞர் வாலி விருது, சாதனையாளர் விருதுகொல்கொத்தா பாரதி தமிழ்ச் சங்கம் முதலான விருதுகளைப் பெற்றுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தில், நானும் அவரும் ஒரு வாரம் கொல்கத்தாவில் தங்கி சொற்பொழிவாற்றினோம். நிறைவு நாளில் மகாகவி பாரதியாரைப் பற்றி ஆங்கிலத்தில் ஆற்றொழுக்காக ஒரு மணிநேரம் பேசினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவர். மிகச் சிறந்த பண்பாளர், நேர்கோட்டு வாழ்க்கையர், தமிழக மேடைகளில் என்னை அறிமுகப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். இவரது சான்றான்மைக்கு ஒரு சான்று சொல்லவேண்டுமானால், பட்டிமன்றம் வழக்காடு மன்றம் போன்றவற்றில் பேசி முடித்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தரும் முழுத் தொகையையும் அந்த உரையோடு (Cover) என்னிடம் தந்துவிடுவார். அரங்கம்நீங்க பாத்து எல்லாருக்கும் இந்தப் பணத்தைப் பிரித்துக்கொடுங்கள்என்பார். எங்களுடன்  பேசிய பேச்சாளர்களுக்கும் அவருக்கும் அப்பணத்தை நான் பிரித்துக்கொடுப்பேன்.

வாழும் தமிழ் அறிஞர்களில் புலமை நலனும் பண்பு நலனும் ஒருசேர வாய்க்கப் பெற்றவர். பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு.. அவர்களைத் தன் வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995