பேராசிரியர் பி.என்.டயஸ் (1941)
திருமதி. கேத்தரின் டயஸ் திரு. அகஸ்டின் டயஸ் இணையரின் மகனாக 07.08.1941 இல் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற இடத்தில் பிறந்தார். புள்ளியியலில் இளநிலை அறிவியல் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் பள்ளிப்படிப்பு கெல்லட் உயர்நிலைப் பள்ளியிலும் இலயோலா கல்லூரியில் உயர்நிலைக் கல்வியையும் பயின்றவர். ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குறள் ஒளி என்ற தலைப்பில் திருக்குறள் குறித்த பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தான் பிறந்த ஊரான மனப்பாடு குறித்து ஊர் வரலாறுகளை நூலாக வடித்துள்ளார். தன் தந்தை பெயரில் ஆங்கிலத்தில் ஒரு மலரும் வெளியிட்டுள்ளார். சென்னை இராயபுரத்தில் சிறுவயதிலிருந்து வளர்ந்தவர். அருள்தந்தை செக்கியுரா வழிகாட்டலில் பயிற்றுநராகப் பணி தொடங்கி விரிவுரையாளராக வளர்ந்து பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நூல் திறந்துவைத்துத் தேர்வு எழுதும் புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். திருவள்ளுவர் பிறப்பிடம் குறித்தும் திருவள்ளுவர் குறுநில மன்னனாக இருந்திருக்க வேண்டும் என்றும் கட்டுரை எழுதியவர். இலயோலா கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். திருக்கோயில்களில் நான் செய்த தொடர் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து முழுமையாகக் கேட்டவர். இன்றும் திருக்குறள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்.