பேராசிரியர் சாலமன் பாப்பையா (22.02.1936)
மதுரை, திருமங்கலம் தாலுக்கா சாத்தங்குடியில் 22-02-1936இல் பிறந்தவர் பாப்பையா. இவரும் இவரது மனைவி ஜெயபாயும் மதுரையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ஆவார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேரராசிரியாகப் பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின்மூலம் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.
சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவையான செய்திகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை, உரை மலர்கள், உரை கொத்து, திருக்குறள் உரையுடன், புறநானூறு புதிய வரிசை, அகநானூறு உரையுடன் முதலான நூல்களைப் படைத்துள்ளார்.
2000ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது, 2010ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முத்தமிழ் பேரறிஞர் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய திருக்குறள் உரைநூல் (1999) சென்னை, திருவல்லிக்கேணி, பாரதியார் இல்லத்தில் வெளியிடும் விழாவினைப் பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்நூலுக்கு அணிந்துரை வாங்குவதற்காக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை நேரில் சந்திக்க அவரது இல்லத்திற்குச் (14.10.1999) செல்லும்போது என்னையும் அழைத்துச் சென்றிருந்தார்.
புறநானூற்றுக்கு (மே 2019) பொருத்தமான உரையும், அகநானூற்றுக்கு அகல உரையும் (மார்ச் 2021) அருமையாக எழுதியிருந்தார். அகநானூற்றின் மூன்று தொகுதிகள் நூல் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் 17-04-2022 ஞாயிறன்று நடைபெற்றது. அவ்விழாவில் நானும் கலந்துகொண்டேன். பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சி நூலுக்கு விரிவான ஆய்வுரை எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் இந்நூலும் வெளிவர இருக்கிறது.
1986ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களோடு நெருக்கமாகப் பழகும் வாய்பினைப் பெற்றிருக்கிறேன். பட்டிமன்றங்கள் பலவற்றில் அவர் தலைமையில் பேசியிருக்கிறேன். மிகச் சிறந்த புலமையாளர். நல்ல பண்பாளர். பட்டிமன்ற உலகில் சான்றோராக வாழ்ந்துவருபவர்.