Skip to content

பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் (03.05.1935 – 10.09.1998)

பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பிறந்து கண்டாச்சிபுரத்தில் வளர்ந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என உயர்ந்தவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.

தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய அணிகள், பெருந்தகை மு.., சங்ககால மகளிர், அறவோர் மு.., டாக்டர் மு..வின் சிந்தனை வளம், குறுந்தொகைத் திறனாய்வு, சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் என முப்பத்தொன்பது நூல்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு மிகுதியாக விற்பனையாகி இவருக்கு மிகுந்த புகழைத் தந்தது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது, சங்கத் தமிழ்ச் செல்வர் விருது முதலான பல விருதுகளைப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் கனவில் தோன்றி என்னை எழுதவில்லையா? எனக் கேட்க, அதற்காக எழுதப்பெற்றதுதான்முருகன் காட்சிஎன்ற நூல். சங்க இலக்கியத்தில் முருகன் எனத் தொடங்கி, வள்ளலார் கண்ட முருகன் என இலக்கியங்கள்தோறும் இடம்பெற்றுள்ள முருகன் காட்சிகளை அருமையாக எடுத்து இயம்புகிறது இந்நூல்.

சங்கநூற் செல்வர் டாக்டர் சி.பா. அவர்களின் தாரக மந்திரம்யாரொடும் பகை கொள்ளலன் எனின் போரொடுங்கும் புகழ் ஓடுங்காதுஎனும் கம்பரின் வைரவரிகளே ஆகும். பேராசிரியர் டாக்டர் சி.பா. அவர்களோடு தொடர்பில் இருந்த அவரின் முதலணி மாணவர்களுள் நானும் ஒருவன். நான் இளங்கலைத் தமிழ் (1974) பயிலும் காலத்தில் அவருடன் ஏற்பட்ட தொடர்பு பின்னர் முதுகலைத் தமிழ் (1976) படிக்கும் காலத்தில் மலர்ந்து மணம் வீசியது. அவருடைய நெறியாள்கையின்கீழேதான் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (1977) முனைவர் பட்டமும் (1982) பெற்றேன். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்வதற்கும் (1984) அவருடைய கருணையே முதன்மையான காரணமாகும்.

பேராசிரியர் சி.பா. அவர்கள் அடிக்கடித் தம் மாணவர்களிடம் கூறும் செய்தி உளம் கொள்ளத்தக்கதாகும். “நன்றாகக் கவனத்தில் கொள். வாழ்க்கைத் துணையைத் தேடும்போது பண்புள்ள பெண்ணையே தேடு. அழகு வேண்டும் தான்! ஆனால், அழகு நிரந்தரம் அல்ல. பண்பே நிரந்தரம். வயது கூடக் கூட அழகு அழியும். ஆனால், பண்பு வளரும். பண்பு நலனே முதுமையில் அழகாக அமைந்து உணர்வுக்கு உவகையை ஊட்டும். எனவே, நண்பரைத் தேடினாலும், வாழ்க்கைத் துணையைத் தேடினாலும் பண்புள்ளவரையே தேடுஎனப் பன்முறை கூறியுள்ளார்.

பேராசிரியர் சி.பா. அவர்களின் சங்ககால மகளிர் எனும் நூல் குறிப்படத்தக்கது. பொற்காலமான சங்ககாலத்தில் மகளிர் பண்பாடு போற்றத் தக்கதாயிருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களும் நிறைந்தவர்களாக அவர்கள் துலங்கினர். வள்ளுவப் பெருந்தகை, குடும்பத் தலைவிக்குரிய நல்ல இலக்கணங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். குடும்பத் தலைவி தன்னுடைய குடும்பத்தைச் சிறப்பாக வழிநடத்தி அவ்வாழ்க்கையில் வெற்றி பெற்றால் தான் அது நிறைவான வாழ்வாகும்.

சங்ககால மகளிர் குடும்ப வாழ்வைச் சிறக்கப் பேணினர். நுண்மான் நுழைபுலமிக்கோராயும், நன்னெறி படைத்தவராகவும், பரந்த மனப்பாங்கு உடையோராயும் திகழ்ந்தனர். இது இயல்பாகத் தமிழர் பண்பாட்டில் அமைந்துள்ளது என்பதனை மறுக்க இயலாது. ஆகவே, சங்ககால மகளிர் பண்பாடு பற்றி அறிய இந்நூல் பெரிதும் உதவும்.