கவிஞர் ஈரோடு தமிழன்பன் (28.09.1933)
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செ.இரா. நடராசன், வள்ளியம்மாள் இணையருக்கு மகனாக 28.09.1933 ஆம் ஆண்டில் பிறந்தார். 88 வயதாகும் இவர் வாழும் தமிழ்க் கவிஞர்களில் தகுதியாலும் வயதாலும் அறிவாலும் மூத்தவர்.
ஈரோட்டில் தமிழ்ப்பணி ஆற்றியதால் ஈரோடு தமிழன்பன் ஆனார். இவரது இயற்பெயர் செகதீசன். தமிழன்பன், விடிவெள்ளி, மலையமான் என்ற புனைப்பெயர்களில் எழுதினார். இவரின் கவிதைகள் (மரபுக் கவிதைகள்) தமிழக அரசின் பரிசு பெற்றது. ஹைக்கூ, லிமரிக், சென்ரியு போன்ற புதுக்கவிதை வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ‘ஒரு வண்டி நிறைய சென்ரியு’ என்ற இவருடைய நூல் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இவரின் ‘வணக்கம் வள்ளுவ’ கவிதை நூல் சாகித்திய அகாதமி விருது (2004) பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை நூல்களைப் படைத்த சாதனையாளர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோடு நெருக்கமாக இருந்தவர். ‘பாரதிதாசனோடு பத்தாண்டுகள்’ என்ற நூல் படிப்போருக்குக் களிப்பைத் தருவது. இன்றும் இயங்கிக் கொண்டே இருப்பவர். எழுதிக் கொண்டே இருப்பவர். சிந்தித்துக் கொண்டே இருப்பவர். அரிமா நோக்கு ஆய்விதழின் ஆசிரியராக இருப்பவர். இறக்குமதி என்ற தலைப்பில் அயல்நாட்டுக் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்து கொண்டே இருக்கிறார். சென்னைப் புதுக்கல்லூரியில் (The New College) தமிழ்ப் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றியவர். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவிஞரோடு அணுக்கமாக இருப்பவர்களில் நானும் ஒருவன். கலைஞரின் செம்மொழி விருது (பத்து இலட்சம்) அவர் பெற்றமைக்காக அவருடைய இல்லத்தில் 03.10.2021 ஆம் நாளன்று சந்தித்து அவரை வாழ்த்தியும் வாழ்த்துப் பெற்றும் வந்தேன்.
தமிழன்பன் கவிதைகள், நெஞ்சின் நிழல், அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், சிலிர்ப்புகள், தோணிகள் வருகின்றன, விடியல் விழுதுகள், தீவுகள் கரையேறுகின்றன, புரட்சிப் போர்க் கோலம், பொது உடைமை பூபாளம், நிலா வரும் நேரம், குடை ராட்டினம், சூரியப் பிறைகள், ஊமை வெயில், திரும்பி வந்த தேர்வலம், உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன் வால்ட் விட்மன், வணக்கம் வள்ளுவ, பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என நூற்றிருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்த் தனிப் பாடல்களை ஆய்வு செய்து (1982) முனைவர் பட்டம் பெற்றவர். தனிப்பாடல் திரட்டு – ஓர் ஆய்வு என்பது நூலாகவும் வெளிவந்துள்ளது.
கவிஞராக, கட்டுரையாளராக, புதுக்கவிதையின் பல்வேறு வடிவங்களை உத்திகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவராக, பேராசிரியராகத் தமிழுக்குப் பல்வேறு நிலைகளில் தொண்டாற்றிய பெருமகன். 88 ஆண்டுகள் முழுமையாக நிறைவாழ்வு வாழும் கவிப்பேரிமயம் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
புரட்சிக்கவிஞர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியவர்களோடு உறவாடியும் தமிழ்க் கவிதை இயலை அடிமுதல் முடிவரை அளந்தும் புதுக்கவிதையின் புது வடிவங்களைப் புனைந்தும் புகழின் குன்றேறி நிற்பவர் ஈரோடு தமிழன்பன்.
சென்னை தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக 1975 முதல் 1992 வரை சிறந்தார். தமிழைச் சரியாக உச்சரித்த, தமிழ்த் தொடர்களை முறையாக வழங்கிய சிறந்த வாசிப்பாளராகப் பொலிந்தார். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளில் தமிழ் முழக்கம் செய்தவர். நூற்றுக்கணக்கான பட்டிமன்றங்கள் கவியரங்கங்களைத் தலைமை ஏற்று நடத்தியவர்.
இவரின் படைப்புகளாக கவிதையில் 68 நூல்களும், உரைநடையில் 25 நூல்களும், மொழிபெயர்ப்புக் கவிதையில் 3 நூல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பெற்றவையாக 16 நூல்களும் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றவையாக 5 நூல்களும் தமிழில் முதல் முயற்சியாக ஒரு வண்டி நிறைய சென்ரியு, லிமரைக்கூ படைப்பு, கஜல் பிறைகள் எனப் பத்து நூல்களும் இவரைப் பற்றிய திறனாய்வு நூல்களாக 20 நூல்களும் கிடைக்கின்றன. இவரின் படைப்புகளை ஆய்வு செய்து பதின்மர் ஆய்வுப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.