Skip to content

தீபம் நா.பார்த்தசாரதி

தீபம் நா.பார்த்தசாரதி (18.12.1932 – 13.12.1987)

தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் இராமாநாதபுரம் மாவட்டம் நரிக்குடி எனும் ஊரைச் சார்ந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பயின்று தமிழ்ப் பண்டிதர் பட்டம் பெற்றவர். தங்கப் பதக்கமும் பெற்றவர். மதுரையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபோது மாலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பயின்று பட்டம் பெற்றவர். முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக் கொண்டு பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். 1987ஆம் ஆண்டில் ஆய்வேட்டை அளிதார். ஆனால் அப்பட்டத்தை வாங்காமலேயே மறைந்துவிட்டார். தினமணிக் கதிர், கதைக் கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகிய இதழ்களில் பொறுப்பாசிரியராக இருந்தவர்.

தன்மானமும் பீடும் பெருமிதமும் மிக்கவர். அமெரிக்க டான்சிக் பல்கலைக்கழகம் பாரதி நூற்றாண்டை ஒட்டி இவருக்குக் கௌரவப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. வலம்புரி சங்கு, தேவதைகளும் சொற்களும், மங்கியதோர் நிலவினிலே, காலத்துக்கு வணக்கம், வேனில் மலர்கள் போன்றன இவருடைய சிறுகதைத் தொகுதிகள். பாண்டிமாதேவி, மணிபல்லவம், வஞ்சிமாநகர், கபாடபுரம், நித்திலவல்லி என ஐந்து வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். இருபது சமூக நாவல்களை எழுதிய மிகச்சிறந்தப் படைப்பாளர். தமிழ்ப் புலமையின் வளமையை இவர் நாவல்களில் காணலாம். தமிழர்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்ற இவரது புதினம் குறிஞ்சி மலர். குறிஞ்சி மலரில் இவர் படைத்த அரவிந்தன், பூரணி மாந்தர்கள் இன்றும் தமிழர்களின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பொன்விலங்கு, ஆத்மாவின் ராகங்கள், சத்தியவெள்ளம், நெஞ்சக்கனல், சமுதாயவீதி, அனிச்சமலர், நீலநயனங்கள் ஆகிய புதினங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெறுவன. இவருடைய சமுதாய வீதி எனும் புதினம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. 55 வயதிற்குள் 51 நூல்களைப் படைத்து அசுர சாதனை புரிந்து அமரராகிவிட்டவர் தீபம் நா.பார்த்தசாரதி.

இவர் எழுதிய பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும் என்ற நூல் மிகச்சிறந்த ஆய்வு நூல். இந்த ஆய்வு நூல் 1. கட்டடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் 2. கட்டடக் கலை மரபு 3. கட்டடக் கலையும் தமிழர் பண்பாடும் 4. கட்டடக் கலைஞரும் கட்டடங்களும் 5. நகரமைப்பு 6. பூம்புகார் நகர் 7. மதுரை நகர் 8. முப்பெரு நகர் 9.நகரமைப்பில் சமுதாயங்கள் ஆகிய ஒன்பது தலைப்புகளில் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. பழந்தமிழரின் கட்டடக்கலைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த நூல் பெருந்துணை புரியும்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995