பேராசிரியர் முனைவர் மு.அப்துல்கறீம் (1932 – 01.03.2008)
இஸ்லாமிய தமிழ் பேராசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் உடையவர். வாணியம்பாடி கல்லூரியில் முதலில் பணியாற்றினார். பின்னர் தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் இருக்கும் காதர் முகைதீன் கல்லூரித் தமிழ்த்துறையில் பணியாற்றினார். தமிழ்ப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர் என உயர்ந்து சிறந்தார். முகைதீன் புராணத்தை ஆய்வு செய்து (1981 – 1985) முனைவர் பட்டம் பெற்றவர்.
எண்பது ஆண்டுகள் வாழ்ந்தவர். இஸ்லாமும் தமிழும் (1985), இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு, முகைதீன் புராணம் (இரு தொகுதிகள்), பாரதி உலக கவி, திருவள்ளுவர் திரு உள்ளம் (வானதி பதிப்பகம் 1980), பாரதிதாசன் பாட்டுத்திறம், சீறாப்புராணம் திறனாய்வு, நம்பிக்கையும் நற்செயலும், இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், வண்ணக்களஞ்சியப் புலவரின் குத்பு நாயகம் ஆய்வுரை (உ.த.நிறுவனம் – 1987), வாழ்வது நம் கையில் எனப் பதிமூன்று நூல்களை எழுதியவர்.
இவருடைய மகன் பேராசிரியர் ஜாபருடன் இணைந்து “வாழ்வது நம் கையில்” (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்) என்ற நூலை எழுதினார். இவரது துணைவியார் இ.எஸ். ஹனீபா எம்.ஏ., அவர்கள்.